நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அண்மையில் பதவி ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியுள்ளது என்றார்.
2021ல், நவீன நாணய கோட்பாட்டின் அடிப்படையில் (Modern Monetary Theory) அச்சிடப்பட்ட பணத்தின் (நாணயத் தாளின்) பெருமதி 1.2 டிரில்லியன் Trillion ரூபாவாகும் (1,200,000,000,000/=). கோடிகளில் ஒரு கோடியே இருபது லட்சமாகும். 2022,ல் அச்சிடப்படவுள்ள பணத் தாளின் பெருமதி 2.78 டிரில்லியன் ஆகும். இதுவரை அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெருமதி ரூபா 558 Billion பில்லியனாகும்.
ஒரு நாட்டின் பெறுமதி அந்நாட்டின் “மொத்த உள்நாட்டு உற்பத்தி” யை (GDP Gross Domestic Product) அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்படுகின்றது. ஒரு நாட்டின் உற்பத்திப் பொருட்களினதும் சேவைகளினதும் மொத்தப் பெருமதியே GDP மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும். (இது வரை சுரண்டப்படாத மூல வளங்கள் தவிர்ந்த)
இலங்கையின் மொ.உ.உ. GDP 2020ல் 80.71 பில்லியன் டொலராகவும் 2021ல் 81 பில்லியன் டொலராகவும் இருந்து. 2022ல் அது 83 பில்லியனாக லாம் எனக் கருதப்படுகின்றது. உலக பொருளாதாரங்களோடு ஒப்பிடும்போது இலங்கையின் மொ.உ.உ. GDP 0.007 % வீதமாகும்.
அச்சிடப்படும் பணத்தால் பண நிரம்பல் (Money Supply) அதிகரிக்கப்படுகின்றது. மேலும் வங்கிகளினால் வைப்புச் செய்யப்பட வேண்டிய “ஒதுக்கீட்டு வீதம்”. (Reserve Rate) மத்திய வங்கியால் (Central Bank) குறைக்கப்படும் போது, வங்கித் துறையின் திரவத்தன்மை (Liquidity) மேலும் அதிகரிக்கப்படுகின்றது. இது பணவீக்கத்தை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கின்றது. அச்சிடப்படும் பணத்தொகையின் பெருமதிக்குச்சமமான பொருளாதார உற்பத்தி ஏற்படாவிட்டால் அது பணவீக்கத்தை அதிகரிக்கும். அதிகரிக்கும் பணவீக்கம் ரூபாவின் பெருமதியை குறைக்கச் செய்யும். மறுபுறம் அது வெளிநாட்டு நாணயங்களின் (Foreign Currency) பெறுமதியை அதிகரிக்கச் செய்யும். இது இறக்குமதிப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்
ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதி செலவுகள் அதிகமாயின் வெளிநாட்டுச் செலாவணித்தட்டுப்பாடு- (Foreign Currency) பற்றாக்குறை (இங்கு டொலர் பற்றாக்குறை) ஏற்படும்.
பணம் என்பது கொடுக்கல் வாங்கலுக்கான ஊடகம் மட்டுமே. (Medium of Exchange) அதன் பெறுமதி என்பது உள்நாட்டு உற்பத்தியிலும் (GDP) , வெளிநாட்டு நாணய செலாவணி நிலுவையிலுமே (Balance of payment) தங்கியுள்ளது.
எல்லை கடந்த பண அச்சிடல் “மிகையான பண வீக்கத்தை” (Hyperinflation) ஏற்படுத்தும். உற்பத்தி ஸ்தம்பித்த நிலையில் அளவு கடந்து பண அச்சிடல் நடைபெறுமாயின் “மிகச் சொற்ப அளவிலான பொருட்களை மிக அதிகமான பணம் துரத்துவதற்குச் சமமாகும்.”
இந்த விபரீதமான பண வீக்கம் 1923 ம் ஆண்டு ஜேர்மனியில் ஏற்பட்டது. 1922-23 ஆண்டுகளில் இருந்த ஜேர்மனியின் “வீமார் அரசாங்கம்” தொழில் பகிஸ்கரிப்பு நடத்திக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்குப் பணம் வழங்குவதற்காக வங்கி நோட்டுகளை அச்சிட்டுக்கொண்டியிருந்தது. தங்கத்தின் பெறுமதியைக் கொண்டிராத இந்த நோட்டுகளால் பணத்தின் மதிப்பு செயலிழந்தது. 1923 ஜனவரி மாதம் 250 மார்க்காக இருந்த ஒரு இறாத்தல் பாணின் (Bread) விலை, அதே வருடம் நவம்பர் மாதம் 200,000 பில்லியனாக உயர்ந்தது.
இதேபோல் ஜிம்பாப்வே (Zimbabwe) இந்த ஒரு வருடத்திற்குள் மாத்திரம் 100 பில்லியன் ஜிம்பாப்வே டாலர்களை அச்சிட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரியில் 60.6% வீதமாகவிருந்த பண வீக்கம் பெப்ரவரி மாதம் 66.1% வீதமாக உயர்ந்தது.
பண வீக்கத்தை ஏற்படுத்தும் பண அச்சிடல் என்பதை “வசியப்படுத்தப்படாத பிசாசு” என நவீன பொருளியலாளர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாடாகக் கையாளப்படாவிட்டால் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
வருமான எல்லைக்குள் வாழ்வை அமைத்துக் கொண்டு, விவசாயம், கைத்தொழில், சேவைகள், கல்வி ஆகிய துறைகளை தியாக நோக்கோடு கடின உழைப்பால் அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டை சுபீட்சம் அடையச்செய்வோமாக!