விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்!

(ப.பன்னீர்செல்வம்)

அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

நேற்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது;

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்திற்கு முன்பதாக அல்லது அதற்கு பின்னர் இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

 

தற்போது மீள் குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கும் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் மற்றும் பதுளை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி எம்.பி.யும் முன்னாள் சீனி தொழிற்றுறை அமைச்சருமான லக்ஷ்மன் செனவிரத்னவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது.

மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் இடையேயான கருத்து மோதல்கள் காரணமாகவே பிரதியமைச்சராகவுள்ள ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை வேறு முக்கிய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே ஐ.ம.சு. முன்னணி எம்.பி. க்களான மனுஷ நாணயக்கார, சீதா குமாரசிங்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால் இதுவரையில் அவர்களுக்கு  எந்தவிதமான அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

இதேவேளை ஐ.ம.சு. முன்னணி எம்.பி. லக்ஷ்மன் செனவிரத்ன பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதும் அரசு சபைக்கு முன் வைத்த பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியதோடு தனது உரைகளில் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares