விக்கெட் இழப்பின்றி பெங்களூரு வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14 வது ஐபிஎல் சீசனின் இன்றைய 2வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

178 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர். பவர் பிளேவிலிருந்தே அதிரடி காட்டி ஓட்டம் குவிக்கும் பொறுப்பை படிக்கல் எடுத்துக்கொண்டார். இதனால், பவர் பிளேவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 9 க்குக் கீழ் குறைந்தது. ரியான் பராக் பந்தில் பவுண்டரி அடித்த படிக்கல் 27 வது பந்தில் அரைசதத்தை எட்டினார். இதையடுத்து, படிக்கல் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டினார்.

இதனால், 10 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 107 ஓட்டங்கள் குவித்தது.

படிக்கலும் 80 ஓட்டங்களைக் கடந்து சதத்தை நெருங்கினார். ஆனால், கோலி பவுண்டரிகளாக விரட்டத் தொடங்கி அதிரடி காட்டினார். இதனால், 24 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த கோலி, 34 வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார்.

அரைசதம் அடித்தும் கோலி அதிரடி காட்டியதால் படிக்கல் சதமடிப்பதில் விறுவிறுப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், முஸ்தபிஸூர் ரஹ்மான் பந்தில் பவுண்டரி அடித்த படிக்கல் 51 வது பந்தில் சதத்தை எட்டினார்.

அதே ஓவரில் பெங்களூரு வெற்றி இலக்கையும் அடைந்தது.

16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் பெங்களூரு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த படிக்கல் 52 பந்துகளில் 101 ஓட்டங்களும், கோலி 47 பந்துகளில் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares