வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு பேதம் இல்லை

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (01) காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகவியலாளர்களை சந்திக்க நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டோம். உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. தெற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான தொடர்பு குறைவு. வடக்கு பிரச்சினை தொடர்பில் இங்குள்ள ஊடகவியலாளர்கள் எழுதுகிறார்கள். அதேபோன்று தெற்கு மக்களின் கருத்தை நீங்கள் எழுதுகின்றீர்கள். அதனுள் பாரிய இடைவெளிகள் உள்ளதனை நாங்கள் பார்க்கின்றோம்.

ஒரு தேசம் என்ற ரீதியில் அனைவரும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செற்பட வேண்டும் என நான் நம்புகின்றேன்.

எங்கள் காலத்தில் பணயக்கைதிகளாக இருந்த லட்ச கணக்காக மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தோம். 1977ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய வேலைத்திட்டங்களை எங்கள் அரசாங்கமே மேற்கொண்டது. எனினும் அந்த வேலைத்திட்டங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தொடர்புப்படுத்த முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக நாடு பின்நோக்கி நகர்ந்தே தவிர முன்னோக்கி வரவில்லை. நாங்கள் வடக்கில் செய்த அபிவிருத்திகளையேனும் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கடந்த அரசாங்கத்தால் வடக்கு மக்களுக்கு என்ன செய்யப்பட்டது. எப்போதும் தங்களுக்கு ஒரு இலாபகரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டு அரசியல் ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்களே தவிர மக்களின் பொருளாதார அபிவிருத்தி, குடி நீர் வழங்க, வீதிகளை அமைக்க, என்ன செய்தார்கள்.

ஊடகங்களும் அந்த விடயங்களை தூண்டிவிடும் நடவடிக்கைகளையே மேற்கொண்டது. இந்த நபர்களை கொண்டு பணி செய்ய வைப்பதற்கு ஊடகங்களும் முயற்சிக்க வில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

போர் நிறைவடைந்த பின்னர் நாங்கள் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தெற்கின் நிலைமையை வடக்கிற்கும் கொண்டுவருவதே எங்கள் அவசியமாக இருந்தது. எனினும் கடந்த காலங்களில் நாடு பின்னோக்கி மாத்திரமே சென்றது. தெற்கு அபிவிருத்தியடையவும் இல்லை. விசேடமாக இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைக்கு பதிலொன்று வழங்க வேண்டும். வடக்கு குறித்தும் பார்க்குமாறே நாங்கள் முதலீட்டாளர்களிடமும் கூறுகின்றோம்.

வடக்கில் நீர்த்தேக்கம் ஒன்று வழங்குவதற்கு தகுந்த சுத்தமான நீர் பெற கூடிய நிலைமைக்கு கொண்டு வருவதற்கே நாங்கள் எதிர்பார்த்தோம். 20 ஏக்கர் காணி பகுதி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது வெற்றியளித்தால் முழுமையான நீர்ப்பரப்பையும் குடி நீர் பெறுவதற்கு பயன்படுத்தவுள்ளோம். அதனை மேற்கொள்வதற்கு நாங்கள் தற்போதே ஆலோசனை வழங்கியுள்ளோம். அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசாவிட்டாலும் இந்த விஷயங்களைப் பற்றி பேச ஊடகங்களுக்கு உரிமை உண்டு. அரசியல்வாதிகள் செய்யாத விடயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

முப்படை மற்றும் பொலிஸாரின் தலையீட்டினால் கொவிட் – 19 தொற்றினை கட்டுப்படுத்த முடிந்தது. சுகாதார அமைச்சு, இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகிய நிறுவனங்கள் வடக்கு மற்றும் தெற்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றின. கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபை தேர்தல்களை நான் நடத்தினேன். அந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்த வேண்டாம் என அழுத்தம் உட்பட பிரயோகிக்கப்பட்டது. தோல்வியுற்றாலும் பரவாயில்லை வடக்கு மக்களுக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று கூற வேண்டிய இடத்திலேயே நான் இருந்தேன். வாக்குகள் வழங்க மாட்டார்கள் என எங்களுக்கு தெரியும். எனினும் நாங்கள் வடக்கு மக்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கினோம். சமீப காலங்களில், வடக்கு மீண்டும் அந்த உரிமையை எடுத்துள்ளது. அரசியல் தலைமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது. வடக்கு – கிழக்கு மக்களுக்கு நாங்கள் வழங்கிய தலைமைத்துவ உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் பறிக்கப்பட்டதென்றே நான் கூற வேண்டும்.

ஊடகவியலாளர் – அண்மையில் வடக்கு ஆளுநர் உங்களை சந்தித்தார். அங்கு வடக்கு ஆளுநருடன் எந்த முறையிலான அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டீர்கள்?

பிரதமர் – முதலீட்டாளர்களுக்கு அரசியலமைப்பினால் பாதுகாப்பு உள்ளன. அதற்கு குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. வருமானம் பெற முடியும். பல முதலீட்டாளர்கள் வடக்கிற்கு செல்லாமையே இங்கு நடந்துள்ளது. நாங்கள் அவர்களை வடக்கிற்கு அனுப்புவதற்கே ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். நாங்கள் அவர்களை வடக்கிற்கு செல்லுமாறே தொடர்ந்து கூறுகின்றோம். அமைச்சர் பந்துல குணவர்தன – முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்ளன. அதன் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் முதலீட்டாளர்ளின் பாதுகாப்பினை உறுதி செய்துள்ளோம். முதலீட்டாளர்கள் கொண்டுவரும் முதலீட்டுகளை விடவும் 2 வீத அதிக வட்டியை நாங்கள் வழங்குகின்றோம்.

ஊடகவியலாளர் – தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. நீங்கள் இது தொடர்பில் எவ்வறான கருத்தை கொண்டுள்ளீர்கள்?

பிரதமர் – யார் வேண்டும் என்றாலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியும். யார் வேண்டும் என்றாலும் எதிர்ப்பு வெளியிட முடியும். அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் நல்லது.

ஊடகவியலாளர் – புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் பெற முடியாமல் போனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெறுவீர்களா?

பிரதமர் – அவை தேர்தலின் பின்னர் பார்க்க வேண்டிய விடயங்கள். பல்வேறு சம்பவங்களையடுத்தே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்கட்சியில் அமர்ந்து சில விடயங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவோம். சில விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

ஊடகவியலாளர் – கிழக்கு பிரதேசத்திற்கான தொல்பொருளியல் செயலணியில் தழிழர்கள் ஒருவரும் இணைத்துக் கொள்ளப்படாமைக்கான காரணம் என்ன?

பிரதமர் – செயலணியின் நில அளவைத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் போன்றவற்றின் பிரதான பதவிகளில் உள்ள அதிகாரிகளே உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். அந்த அனைத்து திணைக்களத்திலும் சிரேஷ்ட தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளும் குறித்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செயலணியில் உள்ள நபர்கள் தொடர்பில் பார்க்காமல் அதில் பிரதிநிதித்துவபடுத்தப்படும் திணைக்களம் மற்றும் நிறுவனங்களையே பார்க்க வேண்டும். வடக்கு கிழக்கில் பயணியாற்றுவது தமிழ் முஸ்லிம் அதிகாரிகளாவர். விழிப்புணர்வுள்ளவர்கள் அதற்காக நியமிக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர் – வடக்கு மற்றும் கிழக்கில் காடழிப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

பிரதமர் – அது வடக்கில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. தெற்கு மாகாணத்திலும் இடம்பெறுகின்றது. காடழிப்பை நிறுத்த வேண்டும், கடழிக்கப்படும் இடத்தை தேடி மீண்டும் பயிரிடவும் வேண்டும்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா – இந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. நாங்கள் சமர்ப்பித்த வீட்டு திட்ட முறைக்கு அவர்கள் விருப்பம் வெளியிட்டார்கள். நாங்கள் கொவிட் தொற்று காலப்பகுதியில் வடக்கு மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழக்கினோம்.

பிரதமர் – எங்களுக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று இல்லை. ஊடகவியலாளர் – கொரோனா வைரஸ் தொடர்பிலான தற்போதைய நிலைமை எப்படி?

பிரதமர் – வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் மாத்திரமே தற்போது நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

ஊடகவியலாளர் – கருணா அம்மான் வெளியிட்ட கருத்து தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பிரதமர் – கருணா வெளியிட்ட கருத்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அந்த கருத்து தவறானது. அது குறித்து இதுவரையில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊடகவியலாளர் – இந்தியாவில் இருந்து வரும் படகு தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல் மேற்கொண்டீர்களா?

பிரதமர் – இன்னமும் இந்தியாவில் இருந்து படகுகள் வருகின்றது. ஜனாதிபதி, நான், இந்த அமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

ஊடகவியலாளர் – கடந்த அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களுக்கு பாரிய அபிவிருத்தி மேற்கொண்டதாக கூறப்பட்டது. எனினும் தேர்தலில் வாக்கு வீதம் குறைவாகவே காணப்பட்டது. இந்த தேர்தல் காலத்தில் நீங்கள் வடக்கு மக்களுக்கு வழங்கும் தகவல் என்ன?

பிரதமர் – டக்லஸ் தேவானந்தா அமைச்சர் போன்று வடக்கு மக்களுக்கு சரியான பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும். எங்கள் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த முறை வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்று சுயாதீனமாக போட்டியிடவுள்ளனர். நாடாளமன்றத்திற்கு வந்து போலியாக கூச்சிலிடுபவர்களினால் பயனில்லை. அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து பேசுபவர்கள் அவசியமாகும். குறைந்த பட்சம் வடக்கு மக்களின் அபிவிருத்திக்காகயேனும் பேச வேண்டும். எங்கள் கிராமத்திற்கு நீர் வேண்டும், வீதி வேண்டும் என பேச கூடிய விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்கள் கொண்டிருக்க வேண்டும். அப்படியின்றி அனைத்திற்கும் அரசியல் சாயம் பூசி நல்ல திட்டங்களுக்கும் எதிர்ப்பு வெளியிடுபவர்களால் பயனில்லை.

ஊடகவியலாளர் – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் பொறுப்பு கூற வேண்டும் என கூறப்படுகின்றது. அவர்களும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்களா?

பிரதமர் – இது தொடர்பில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு பணியை செய்து வருகின்றது. அது சாதாரண ஆணைக்குழு அல்ல. அது சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளடங்கிய ஆணைக்குழுவாகும். அவர்கள் அழைப்பவர்கள் வந்து சாட்சியளிப்பது கட்டாயமாகும்.

ஊடகவியலாளர் – மகாவலி திட்டத்தில் வடக்கு மக்களுக்கு இதுவரையில் கிடைத்துள்ள நன்மைகள் என்ன?

பிரதமர் – முழுமையான திட்டம் மக்களுக்கு நீர் வழங்கவே முன்னெடுக்கப்பட்டது. எனினும் இரணைமடுவிற்கு அப்பால் நீர் வழங்க அந்த மக்கள் இடமளிப்பதில்லை. அது தான் உண்மை. அதற்கு வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். சமீபத்தில், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து பேசினோம்.

ஊடகவியலாளர் – எனது ஊடக வாழ்க்கைக்கு 52 வருடங்களாகின்றது. நான் லேக்ஹவுஸ் யாழ்ப்பாண பிரதேச செய்தியாளர். வாழ்க்கையில் எங்களுக்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எங்களுக்கு அவசியமான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கினால் பெரிய உதவியாக இருக்கும். எங்களுக்கு போக்குவரத்து சிக்கல்கள் உட்பட உள்ளது. இதனால் எங்கள் தொழில் நடவடிக்கையை திறம்பட செய்ய முடியவில்லை.

அமைச்சர் பந்துல குணவர்தன – இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அவசியமாக நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொளள்ப்படும்.

ஊடகவியலாளர் – கடந்த காலங்களில் நபர்கள் கைது செய்யப்படுகின்ற செய்திகள் பதிவாகியது?

பிரதமர் – சமீபத்தில் ஒரு நாள் இராணுவ முகாமிற்கு அருகில் வெடி குண்டு ஒன்று காணப்பட்டது. கைது செய்யாமல் இருந்தால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? வெடித்திருந்தால் அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானம் என்ன? சில இடங்களில் வெடி குண்டுகள் மீட்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குழுவினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தெற்கிலும் அவ்வாறே. தெற்கில் பாதாள உலக குழுவினர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது டீ56 ரகத்திலான 12 துப்பாக்கிகள் கிடைத்தது. அது சிறிய விடயம் அல்ல. வடக்கு – தெற்கு என்று பேதமில்லை. விடுதலை புலிகளாகவும் இருக்கலாம் பாதாள உலக குழுவினராகவும் இருக்கலாம். அண்மையில் கிளிநொச்சியில் பாதாள குழுவொன்று செயற்பட்டது. அப்போது சந்தேகத்தில் கைது செய்வதற்கு உரிமைகள் உண்டு. அவ்வாறு செய்வது மக்களின் பாதுகாப்பிற்கே தவிர எங்களின் அவசியத்திற்காக அல்ல. மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்களின் பாதுகப்பு குறித்து எழுதவும், பேசவும் உங்களுக்கு பொறுப்புகள் உள்ளது. சம்பந்தமில்லாதவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் பாடசாலை செல்லும் மாணவர்களை கைது செய்யவில்லை. இந்த இடத்தில் அதிகமாக இளம் ஊடகவியலாளர்களே உள்ளனர். வரலாற்றில் நடந்தவைகளை அவர்கள் பார்த்ததில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் இணைந்திருநத்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares