பிரதான செய்திகள்

வட மாகாண எல்லை நிர்ணயத்தில் இழக்கப்போகும் முஸ்லிம் மாகாண பிரநிதித்துவம்

(பர்வீன் சனூன்)

வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000 முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் மாந்தை மேற்கு – மடு கிளை வலியுறுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளரிடம், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கையளித்துள்ள முன்மொழிவில் இவ்வாறு சுட்டிக்காட்டப்படுள்ளது.

முஸ்லிம் பிரதேச எல்லை நிர்ணயம் சம்பந்தமான இந்த முன்மொழிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

• இலங்கை நாட்டில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையோ அதேபோல், வடமாகாணத்தில் முஸ்லீம்கள் தமிழ் மக்களுக்கு சிறுபான்மை என்ற உண்மை நிலையை கௌரவத்திற்குரிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

• ஆகவே, வடமாகாணத்திற்கான முஸ்லீம் மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் பழைய முறையிலான விகிதாசார தேர்தல் முறைமை அமுலில் இருக்க வேண்டும்.

• ஆனால் விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி தொகுதிவாரியாக மாற்றப்படும்போது, முஸ்லீம்களுக்கான பிரதிநிதித்துவம் சாத்தியமா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு கௌரவ ஆணைக்குழு விடை காண வேண்டும்.

• எனவே, வட மாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000 முஸ்லீம்களுக்கான மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான பின்வரும் ஆலோசனைகளை இவ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்து நிற்கின்றோம்.

• 1990-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது சுமார் 15,000 குடும்பங்களாக இருந்த நாங்கள், தற்போது சுமார் 45,000 குடும்பங்களாக விரிவடைந்துள்ளோம். 1990 ஆம் ஆண்டு முன் இருந்தவாறு மன்னார் மாவட்ட எல்லையை மீண்டும் பெற்றுத்தர இவ் ஆணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும் என்பதோடு, முஸ்லீம்கள் செறிந்து வாழும் கிராமங்களின் எல்லைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வில்பத்து தேசிய வனத்திற்கும் எங்களின் வெளியேற்றத்தின் பின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய எல்லைகள் மூலம் முஸ்லீம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை இவ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து செய்யப்படுவதற்கும், பழைய எல்லை முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் இவ்வாணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும்.

• மாந்தை மேற்கு, மடு பிரதேசங்களை உள்ளடக்கி இரு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வண்ணம் ஒரு தொகுதியாக மாற்றக் கோரல். இது ஒரு பரந்த எல்லைகளை கொண்டதும், அதிக சனத்தொகை கொண்டதுமான இரு பிரதேச செயலகங்களை கொண்ட பிரதேசமாக இருப்பதால், இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அங்கீகரிக்குமாரு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் இரு சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியும்.

• பிரதேச சபைகளின் வட்டாரப்பிரிப்பு முஸ்லீம் பிரதேசங்களை வெகுவாகப் பாதித்துள்ளபடியால், இப்பாதிப்புக்கள் மாகாண சபை எல்லை நிர்ணயத்திலும் ஏற்படா வண்ணம் இருத்தல் வேண்டும்.

• 50 : 50 விகிதாசார முறைமை சிறுபான்மை மக்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதை உறுதிப்படுத்தி சிபாரிசு செய்யுமாறு இவ்வாணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றோம்.

• 27 ஆண்டு காலமாக அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மக்கள் தொடர்பான பின்வரும் முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

• உண்மைநிலையறிதலும், பகிரங்கப்படுத்தலும்
• நீதி நியாயம் (அரசியல் பிரதிநிதித்துவமும், எல்லை நிர்ணயமும்)
• இழப்பீடு
• மீள் நிகழாமை
• முழுமையான மீள் குடியேற்றம்

ஆகியவற்றை நடைமுறைபடுத்திய பின்புதான் வட்டார, மாகாண எல்லை நிர்ணய விடயங்களில் முழுமையான முடிவுகளை எடுக்கும்படி சிபாரிசு செய்யுமாறு வேண்டுகிறோம்.

• தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தொகைமதிப்பீடு செய்யப்படுவதானதும், வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதானதும், எங்களின் வாக்காளர் பதிவையும் சனத்தொகை பதிவையும் வெகுவாகக் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டு எம்சமூகம் மீது பாரியதோர் அடிப்படை உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட எமக்கு இது மேலும் ஒரு புதிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதோடு, எமது சமூகம் சார்ந்த உரிமைகள் மறுக்கப்படுவதோடு, இல்லாமல் செய்யப்படுவதாகவும் அமைந்துள்ளது. இந்த தொகுதிவாரியான தேர்தல் முறையும், எல்லை நிர்ணயங்களும் ஐ.நா சபையின் முன்மொழிவுகளின் கோட்பாடுகளான உண்மையை அறிதல், நீதி நியாயம், இழப்பீடு மீள் நிகழாமை, முழுமையான மீள் குடியேற்றம் இவை அனைத்தும் இதன் மூலம் முற்றாக எமது முஸ்லீம் சமூகத்திற்கு மறுக்கப்படுகின்றன.

• எனவே தற்போது நடைமுறைபடுத்தப்படவுள்ள வட்டார, மாகாண எல்லை நிர்ணய மாற்றத்தின் மூலம் முறையற்ற எல்லைபிரிப்பு, மக்கள் சனத்தொகைக்கும், நிலப்பரப்பிற்கும் ஏற்ப பிரிபடாமை, முழுமையாக மக்களை மீள் குடியேற்றி அச்சனத்தொகை பரம்பல் கணக்கெடுக்கப்படாமை, நல்லாட்சி அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களை மட்டும் திருப்திப்படுத்தும் யுக்தியை கையாண்டிருப்பது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஐ.நா.சபையில் வாக்குறுதி வழங்கி ஒப்புதல் அளித்த விடயங்களிலும் ஐ.நா.சபை ஏற்படுத்திய பொறிமுறைகளிலும் நீண்டகால அகதிகளாக வாழும் K];ypk; மக்களை புறக்கணிப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

• ஐ.நா.சபையில் உள்வாங்கப்பட்ட சீராக்கம் சீர்திருத்தம் என்ற இணைப்பாக்கத்தில், சீராக்கம் என்ற முறையில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதிவாரியான முறைமையை பாராளுமன்றத்தில் அவசரமாக முன்மொழிந்து மாற்றத்தை கொண்டுவந்ததால் சிறுபான்மை முஸ்லீம் சமூகம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இச்சீர்திருத்தத்தினால் சிறுபான்மையின முஸ்லீம்களின் இருப்பும், பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆயுத போராட்டகாலத்தில் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம் சமூகம் இச்சீர்திருத்தங்கள் மூலம் அதனைவிட மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றது. முன்னரான எங்களுடைய பலவந்த வெளியேற்றத்தினால் கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதுடன் இந்த புதிய முன்மொழிவினால் எங்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் பாதிப்படைந்துள்ளது.

• மாந்தை மேற்கு, மடு பிரதேச பிரிவுகளை ஒரு மாகாண தொகுதியாக இணைத்து இரட்டை அங்கத்துவ தொகுதியாக மாற்றித்தருவதன் மூலம், இவ்விரண்டு பிரதேச பகுதியில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட கௌரவத்திற்குரிய இவ்வாணைக்குழு உறுதி செய்யவேண்டும் என்பது எங்களின் வழுவான கோரிக்கையாகும்.

இந்த நாட்டின் யுத்த மேகம் ஒழிந்துள்ள நிலையில்கூட, வடமாகாண முஸ்லீம்களாகிய நாங்கள் தொலைத்த எமது பூர்வீகத்தை தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே உள்ளோம். எமது பூர்வீகம் எமது வாழ்வுரிமை. எமது வாழ்வுரிமையின் அடையாளம் எமது அரசியல் பிரதிநிதித்துவமாகும்.

வஞ்சிக்கப்பட்டு இம்சிக்கப்பட்டு சொத்திழந்து வாழ்விழந்து அகதியாக அலைகின்ற எமக்கு நியாயம் தரப்படக்கூடாதா? எமது மீள் குடியேற்றம் இன்னும் மந்தகதி ஆக்கப்பட வேண்டுமா? எமது பிரதேசம் மீள உருவாக்கப்படக் கூடாதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேட எமக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்த முறைமை மூலம் எம்மை அரசியல் அனாதைகளாக்க வேண்டாம்.

எமக்கான பிரதிநிதித்துவங்களை சூழ்ச்சிகள் மூலம் இல்லாதாக்காது உரிமையோடு பெற்றுக்கொள்ள நீதிமிகு இவ்வாணைக்குழு வழிகோல வேண்டுமென வேதனையோடு வேண்டிக்கொள்கின்றோம்.

Related posts

மன்னாரில் காணமல்போன மனநோயாளி! பொலிஸ் முறைப்பாடு

wpengine

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தீர்மானம் ஒத்திவைப்பு

wpengine