வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும்

வட மாகாண அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துமாறும், இந்த மாற்றத்தின்போது, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்குமாறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் நாளைய தினம் கையளிக்கப்படவுள்ளது.

வட மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துள்ளன. அமைச்சர்களின் சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது.

எனவே எஞ்சிய காலத்திலாவது மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கு இந்த அமைச்சரவையை மாற்றுமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதவியிலுள்ள 4 அமைச்சர்களும் மாற்றப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கவேண்டும்.

அவைத் தலைவர், பிரதி அவைத்தலைவர் பதவிகளில் மாற்றம் கொண்டுவர முடியுமாயின், அதிலும் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியம்.

போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுப் பதவி ஒன்றுகூட வழங்கப்படவில்லை.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஓர் அமைச்சு பதவி வழங்கவேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே ஆளும் கட்சி உறுப்பினர்களிடத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமைச்சரவை மற்றும் அவைத் தலைவர் அடங்கலாக 6 பேர் தவிர்ந்த எஞ்சிய ஆளும் கட்சியின் 24 உறுப்பினர்களில் 20 பேர் இதுவரையில் கையெழுத்திட்டுள்ளனர்.

எஞ்சியோரிடம் இன்றும் நாளையும் கையெழுத்துப் பெறப்பட்டு, வடக்கு மாகாண சபையின் நாளைய அமர்வின்போது, இந்தக் கோரிக்கை கடிதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares