வடக்கு மாகாண சபையில் NFGGயின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது

வடக்கு மாகாணசபை அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனை முன்மொழிவுகளை அண்மையில் NFGG முன்வைத்திருந்தது.

மேற்படி அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனைகள் முன்மொழிவிற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பில் அதன் பிரதிநிதியும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய அ.அஸ்மின் அவர்கள் 6 அம்சங்களை உள்ளடக்கிய முஸ்லிம் சமூகம் சார் ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.

மேற்படி ஆலோசனைகளை குறித்த பிரேரணையில் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே மேற்படி பிரேரணைக்கு தனது ஆதரவினை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் 10ஆம் திகதி அமர்விலும் மேற்படி திருத்திய பதிப்பு உறுப்பினர்களின் பார்வைக்கு வழங்கப்படாமையினைத் தெடர்ந்து, தன்னுடைய ஆதரவினை மீளப்பெற்றுக் கொள்வதாக இன்றைய சபை அமர்வின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் சபையில் தெரிவித்தார்.

அவரால் முன்வைக்கப்பட்ட 6 திருத்தங்களும் வருமாறு:

1. இலங்கை மக்களாகிய நாம் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என்ற தேசிய இனத்துவ அடையாளங்களை பரஸ்பரம் அங்கீகரித்து, மதித்து, சகவாழ்வை உறுதி செய்து, எமது மக்களின் தனித்துவங்களைப் பேணிக்கொள்ளத் தக்கவகையில் பிராந்திய ரீதியான அதிகாரப் பகிர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்.

2. இந்த நாட்டில், ‘முஸ்லிம் மக்கள் ஒரு தனியான தேசிய இனத்துவம்’ என்பதையும் இலங்கை இனப்பிரச்சினையில் முஸ்லிம்களும் ஒரு தனியான தரப்பினர் என்பதனையும் வெளிப்படையாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே முஸ்லிம்களின் விடயம் நோக்கப்படுதல் வேண்டும்.

‘முஸ்லிம் மக்கள் ஒரு தனியான தேசிய இனம்’ என்பது சுதந்திரத்திற்குப் பிந்திய காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களினால் அங்கீகரிக்கப்பட்ட விடயம் என்பது இங்கு கவனிக்கப்படல் வேண்டும்.

3. கிழக்கு மாகாண தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோரது முழுமையான அபிலாஷைகளின் அடிப்படையிலேயே வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகாக அல்லது பிரிந்த அலகாக தீர்மானிக்கப்படல் வேண்டும். அந்த வகையில்தான் மேற்படி விடயத்தில் அந்த மக்களின் விருப்பை அறிவதற்கான தனியான பொறிமுறை அவசியமாகும். அதன் அடிப்படையிலேயே இறுதியான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். (இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு நினைவுபடுத்தக்கது)

4. முன் மொழியப்படும் ‘முஸ்லிம் பெரும்பான்மை அதிகார அலகு’ என்பது ஏனைய பிராந்திய அலகுகளைப் போன்ற சமஅதிகார அலகாக அமைவதையும் அங்கு வாழ்கின்ற மக்களின் குடிசனப் பரம்பலுக்கு அமைய காணி உள்ளிட்ட சகல வளப்பகிர்வுகள் இடம்பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

5. தென்னிலங்கை வாழ் முஸ்லிம்களும் தேசிய முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரதான அங்கம் என்றவகையில் அவர்களுடைய அபிலாசைகளை ஈடு செய்யத்தக்க விசேட அதிகாரப் பகிர்வு முறைகளையயும் சட்ட ஏற்பாடுகளையும் தென்னிலங்கையின் மாகாண அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.

6. அரசியல் தீர்வில், முஸ்லிம்களுக்கான தீர்வு தொடர்பில் முஸ்லிம் மக்களுடனான முழுமையான பேச்சுவார்த்தைகளைஇ கலந்துரையாடல்களை தமிழ் மக்களும் தலைவர்களும் உறுதி செய்தல் அவசியமாகும்.

ஆகிய 6 அம்சங்களே குறித்த பிரேரணையில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களால் முன்மொழியப்பட்டிருந்தது. மேற்படி திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருந்தால் மாத்திரமே குறித்த பிரேரணைக்கு தனது ஆதரவினை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் குறிப்பிட்ட திருத்தங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய முடியாத காரணத்தினால் மேற்படி ஆதரவினை அவர் மீளப்பெறுவதாக இன்று 10-05-2016 அன்று வடக்கு மாகாண அமர்வின் போது தெரிவித்தார்.

என்.எம்.அப்துல்லாஹ்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares