Breaking
Fri. Dec 27th, 2024

வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீரைப் பெறவேண்டுமானால் வடமாகாணசபை உறுப்பினர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தி.பாரதிதாசன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 வீதம் சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு சுத்தமான குடிநீர் தேடலுக்கான நடை பவனி நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1985ஆம் ஆண்டிலிருந்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பாரிய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்குத் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதும் அத்துடன் தரமான குடிநீரை நல்லமுறையில் வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பல இழப்புக்களை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சந்தித்தது. குறிப்பாக இச்சபைக்குச் சொந்தமான தண்ணீர்த் தாங்கிகள் தரைமட்டமாக்கப்பட்டமை மற்றும் ஊழியர்களின் இறப்பு ஏற்பட்டமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

மக்களுக்கு குடிநீரை வழங்குவது தொடர்பில் அன்றிலிருந்து இன்றுவரை பல முயற்சிகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்ததன் காரணமாக 3 வீதமாக இருந்த குழாய் நீர் விநியோகம் தற்போது 9 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுப் பகுதியில் கடல் நீரிலிருந்து நன்னீராக்கும் செயற்றிட்டம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை மன்னார், வவுனியா மாவட்டங்களில் பாரிய நன்னீர் திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றது. அதேபோன்று கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வருட இறுதியில் கிளிநொச்சிக்கான குடிநீர்த் திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

எனினும் இத்திட்டத்தை யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கும் போது பல தடைகள் பலரால் ஏற்படுத்தப்படுகின்றன.

யாழ்.மாவட்டத்திலுள்ள நீர் நிலைமைகள் மிகவும் மாசுபடுத்தப்பட்டு காணப்படுகின்றன. சிறிய நீர்த்தேக்கமாக உள்ள கிணறுகளிலிருந்து மாகாணத்திற்கோ பெரிய திட்டங்களிற்கோ நீரை வழங்கமுடியாது.

இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களில் 45 வீதம் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகின்றது. 2020 ஆம் ஆண்டு 60 வீதமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

வடமாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் 2020 ஆம் ஆண்டு 60 வீத குடிநீர் வழங்கல் திட்டத்தை எட்டும். எனினும் வடக்கு மாகாணத்தில் 40 வீதமாவது அடைய வேண்டுமானால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மட்டும் முயற்சி செய்தால் போதாது. இங்குள்ள வடமாகாண சபையும் பாரா-ளு-மன்ற உறுப்பினர்களும் அத்துடன் மக்களும் முயற்சிக்க வேண்டும். அதன் மூலமே குறித்த இலக்கை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *