வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளார்.


வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிவிப்பை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;


தற்போது நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருவதால் இந்நோய் தொடர்பான கண்காணிப்பினை இலகுபடுத்தும் பொருட்டு வடக்கு மாகாண ஆளுநர், அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் பெயர், வதிவிட முகவரி மற்றும் கைத்தொலைபேசி இலக்கம் என்பவற்றை நிறுவனம் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தமது ஊழியர்களில் மூத்த நிலையிலுள்ள ஒருவரை நிறுவனத்திற்கான இணைப்பாளராக நியமனம் செய்து அவரது விவரங்களையும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு வழங்க வேண்டும்.


இத்தொடர்பாடல் தகவல்களை அனைத்து நிறுவனங்களும் தமது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஆளுநரின் பணிப்புரைக்கமைய சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares