றிஷாட் மற்றும் ஹக்கீம் கட்சியின் தேசிய பட்டியல் முரண்பாடு

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே போட்டியிட்டது. ஆயினும், கட்சியின் பொரும்பாலானோர் அதேகட்சியின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். மஹிந்த ஆதரவாளர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க ஆகியோர், தேர்தலில் தோல்வியுற்றனர்.

ஆனால், மைத்திரி அவர்களைத் தேசிய பட்டியல் மூலம் எம்.பிக்களாக நியமித்தார்.   
தமக்கு எதிராக உள்ளவர்களைத் தம் பக்கம் வளைத்துக் கொள்வதற்காகவே, மைத்திரி இவர்களை அன்று தேசிய பட்டியல் மூலம் நியமித்தார். அதை அடுத்து, சில காலம் மைத்திரியை ஆதரித்த அவர்கள், பின்னர் மீண்டும் மஹிந்தவை ஆதரிக்கத் தொடங்கினர்.   

1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் அ.அமிர்தலிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில், அக்கட்சிக்கு தேசிய பட்டியல் மூலம் ஓர் ஆசனம் கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை, சில நாள்களாக நீடித்தது. இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்த அமிர்தலிங்கம், கட்சியின் செயலாளர் என்ற வகையில், தேசிய பட்டியல் நியமனத்துக்காகத் தமது பெயரையே தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்து, மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.  

எந்தவொரு பொதுத் தேர்தலை அடுத்தும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இந்தத் தேசிய பட்டியல் நியமனங்கள் காரணமாகப் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.   

ஏனெனில், அக்கட்சிக்கு அநேகமாக தேசிய பட்டியல் மூலம், நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனம் அல்லது இரண்டு ஆசனங்களே கிடைக்கும். அந்த ஒன்றையோ, இரண்டையோ எதிர்பார்த்துப் பலர் இருப்பார்கள். தமது எதிர்பார்ப்பை நியாயப்படுத்த அவர்கள், பல காரணங்கள் கூறுவார்கள். பெரும்பாலும், பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே பலரது வாதமாகும்.   

அதன்படி, சிலர் அம்பாறைக்கு ஒரு நியமனம் வேண்டும் என்று கூறி, தமது பிரதேசம் அட்டாளைச்சேனையாக இருந்தால் அட்டாளைச்சேனைக்குத் தான் அது வழங்கப்பட வேண்டும் என்பதற்கு, பல காரணங்களைக் கூறுவார்கள். அதேபோல், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் எப்படியோ தமக்கு ஒரு நியமனம் கிடைக்க வேண்டும் என்பதற்கு, பிரதேசத்தின் முக்கியத்தை அல்லது, தமது தொழிலின் முக்கியத்துவத்தைப் போன்ற ஏதாவது ஒன்றைக் கூறி வாதிடுவார்கள். சிலர் பதவி கிடைக்காதுவிட்டால் கட்சியை விட்டு வெளியேறிவிடுவார்கள். துறைசார் நிபுணத்துவம், இன விகிதாசாரம் ஆகிய அடிப்படைக் காரணிகள் எதுவும் அப்போது எடுபடாது.  

உண்மையிலேயே முஸ்லிம் காங்கிரஸ், இருமுறை இந்தத் தேசிய பட்டியல் நியமனங்கள் காரணமாகவே பிளவுபட்டு இருக்கிறது. முதலாவது முறை, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹ்மத், ஒரு முறை மு.காவை விட்டு வெளியேறி ஜனநாயக ஐக்கிய முன்னணியை (துஆவை) உருவாக்க, தேசிய பட்டியல் நியமனம் பற்றிய பிரச்சினையே காரணமாகியது எனக் கூறப்படுகிறது. அதேபோல், கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் வெளியேறவும் இதே பிரச்சினை தான் காரணமாகியது. ஆனால், வெளியேறியோர் எப்போதும் வேறு காரணங்களைத் தான் கூறினார்கள்.  

இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக, மு.கா தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த முறை மு.காவுக்குக் கிடைத்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு தற்காலிகமாகவென இருவரை நியமித்தார். இருவரும் பின்னர் தமது பதவியை இராஜினாமாச் செய்தனர்.   

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள்ளும் கடந்த முறை தேசிய பட்டியல் நியமனம் காரணமாக முரண்பாடுகள் எழுந்தன. கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்குக் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன், எம்.எச்.எம். நவவியை நியமித்தார். நவவி அதேதேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இதைக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த வை.எல்.எஸ். ஹமீத் விமர்சித்ததால், ரிஷாத் அவரைக் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்து இடைநிறுத்தினார். சில வருடங்களுக்குப் பின்னர் ஹமீத் மீண்டும் ரிஷாட்டின் கட்சியிலேயே சேர்ந்து கொண்டார்.    

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares