ரணில் அரசு வீழ்வதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் விக்னேஸ்வரன்

ரணில் அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாளை (08.12.2022) வரவு – செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் கஜேந்திரகுமாரின் கட்சி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்பேன். எப்படியும் பாதீட்டை எதிர்க்கமாட்டேன்.

இந்த அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்க மாட்டேன். ஏனெனில், இந்த அரசை விட்டால் அடுத்து வரும் அரசு இதனிலும் பார்க்கக் கேவலமான அரசாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணுகின்றேன்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை இன்னும் சீர்கெடும். தற்போது இருக்கும் ரணிலைத் தொடர்ந்து இருக்கச் செய்து பொருளாதார ரீதியாக சில நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அவருடன் சேர்ந்து செல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் சிங்கள அரசுகளிடமிருந்து எடுக்க முடியாது. அதற்காக அவர்களுக்கு எதிராக இருந்து கொண்டும் அவர்களிடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று உண்மையாகவே நினைத்தால், ஒற்றையாட்சிக்குப் புறம்பான ஓர் ஆட்சி முறையை எவ்வாறு நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்பதை அவர்கள் (அரசு) முன்வைத்தால்தான் அவ்வாறான பேச்சுக்களுக்கு நாங்கள் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares