உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

யெமெனில் யுத்த நிறுத்தம்; இதுவேணும் நீடிக்குமா?

[எம்.ஐ.முபாறக் ]
மத்திய கிழக்கில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போட்டியில் பலியான நாடுகளுள் யெமெனும் ஒன்று.ஈராக்,துனீசியா,லிபியா,எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இறுதியாகப் பலியானது யெமென்தான்.

யெமெனில் தெற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதியில் பலமான நிலையில் இருக்கும் அல்-கைதா நீண்ட காலமாக யெமென் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றது.யெமென் அரசுடன் இணைந்து அமெரிக்கா அல்-கைதாவுக்கு எதிராக விமானத் தாக்குதல்களையும் நடத்தி வந்தது.

அல்-கைதாவின் அட்டகாசம் அதிகரித்திருந்த நிலையில்,யெமெனுக்கு மேலும் தலையிடியைக் கொடுக்கும் வகையில்,கடந்த வருடம் ஷிஆ பிரிவான ஹவ்திகளும் களத்தில் குதித்தனர்.இதன் பிறகுதான் யெமென் பாரிய உள்நாட்டுப் போருக்கு முகங்கொடுக்கத் தொடங்கியது;அழிவுகளைச் சந்தித்தது.

மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இடம்பெற்று வருவதைப் போன்று யெமென் யுத்தமும் அதிகாரப் போட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான்.மத்திய கிழக்கில்  தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டப் போராடி வரும் ஷி ஆ பிரிவினருக்கும் சுன்னி பிரிவினருக்கும் இடையிலான போட்டியின் ஒரு பகுதிதான் இந்த யெமென் யுத்தம்.

மத்திய கிழக்கின் வல்லரச நாடாகத் துடிக்கும் ஷிஆ முஸ்லிம் நாடான ஈரானும் சுன்னி முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவும் நடத்துகின்ற பலப் பரீட்சையின் மற்றுமோர் அங்கம்தான் இந்த யெமென் யுத்தம்.7cedd487-4fb7-4c2e-9c1b-71eb27421bcd

மத்திய கிழக்கில் உள்ள ஈராக் மற்றும் சிரியா போன்ற ஷிஆ முஸ்லிம்  நாடுகளையும் சுன்னி முஸ்லிம் நாடுகளில் வாழும் ஷிஆ முஸ்லிம்களையும் பாதுகாத்து-பலப்படுத்தி-மத்திய கிழக்கு முழுவதிலும் ஷிஆ முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஈரான் அண்மைக் காலமாகப் போராடி வருகின்றது.

இந்தத் திட்டத்துக்கு எதிராகக் களமிறங்கிய சவூதியும் அதனுடன் இணைந்த சுன்னி முஸ்லிம் நாடுகளும் ஈரானை ஒரு கை பார்ப்பதென்றே நிற்கின்றன.இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பற்றி  எரிகின்றன.

சிரியாவில் உள்ள ஷிஆ ஆட்சியைக் கவிழ்பதற்காக சுன்னி முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் பல ஐந்து வருடங்களுக்கு முன் களமிறங்கின.அந்த ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டது.பிறகு ரஷ்யாவும் ஈரானுடன் இணைந்து கொண்டது.

மறுபுறம்,சிரியா அரசுக்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சவூதி மற்றும் துருக்கி போன்ற நாடுகள் உதவி வருகின்றன.அதேபோல்,அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவும் சிரியா அரசுக்கு எதிரான தரப்புக்குக் கிடைக்கத் தொடங்கியது.People search for survivors under the rubble of houses destroyed by Saudi airstrikes near Sanaa Airport, Yemen, Thursday, March 26, 2015. Saudi Arabia launched airstrikes Thursday targeting military installations in Yemen held by Shiite rebels who were taking over a key port city in the country's south and had driven the embattled president to flee by sea, security officials said. (AP Photo/Hani Mohammed)

இந்த அதிகாரப் போட்டி-பெரும் யுத்தம் 2011 இல் தொடங்கி பேரழிவுகளை ஏற்படுத்தி இந்த வருடம் பெப்ரவரியில்தான் ஓரளவு முடிவுக்கு வந்தது.சிரியா அரசுக்கும் அதற்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இப்போது அங்கு பகுதியளவிலான யுத்த நிறுத்தம் ஒன்று நடைமுறையில் உள்ளது.ஆனால்,சிரியா அரசுக்கும் ஐ.எஸ் மற்றும் அல்-கைதா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான யுத்தம் தொடர்கின்றது.

சிரியாவில் முழுமையான சிவில் நிர்வாகம் திரும்புவதற்கு ஏதுவாக அங்கு இப்போது நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது.இந்த வரிசையில் யெமெனும் கடந்த வாரம் யுத்த நிறுத்தம் ஒன்றைச் சந்தித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபோல்,ஷிஆ-சுன்னி அதிகாரப் போட்டியின் ஓர் அங்கமாக  யெமெனில் வாழும் ஹவ்தி ஷிஆ பிரிவினர் யெமென் அரசுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கினர்.தலை நகர் சனாவையும் கைப்பற்றினர்.இதனால் நிலை குலைந்து போன அரசு கட்டுப்பாட்டை இழந்தது.ஹவ்திகளால் வீட்டுக் காவலில் வைக்கப்படும் நிலைக்கு அந்நாட்டின் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தள்ளப்பட்டார்.221ae86d-9510-4120-88be-bcdfca35afaf

வீட்டுக் காவலில் இருந்து யெமெனின் தென் பகுதிக்குத் தப்பிச் சென்ற ஹாதி யெதன் பகுதியை தலைநகராகப் பிரகடணப்படுத்தி அங்கிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்.ஆனால்,ஹவ்திகள் அந்தப் பகுதியையும் நெருங்கியதால் ஹாதி சவூதியின் உதவியை நாடினார்.

ஜோர்தான்,எகிப்தி,மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு யெமெனுக்கு ஆதரவாகக் களமிறங்கியது சவூதி;ஹவ்திக்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது.

மறுபுறம்,ஹவ்திக்கள் ஈரானின் அனுசரணையுடன் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.ஆனால்,அதன் பங்களிப்பை வெளியில் காட்ட ஈரான் மறுக்கின்றது.தனக்கும் ஹவ்திக்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கூறி வருகின்றது.அனால்,ஈரான்தான் ஹவ்திக்களை இயக்குகின்றது என்பது உலகம் அறிந்த உண்மை.

யெமெனின் சனத் தொகையில் மூன்றில் ஒன்று பகுதியாக இருக்கும் ஹவ்திக்கள்  யெமென் அரசால் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 

யெமெனில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டு வடக்கு யெமெனில் செல்வாக்குடன் திகழும் இவர்கள் சுயாட்சியைக் கோரி 2004 இல் யெமென்  அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஹவ்தி என்பவர் யெமென் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.2010 இல் யெமென் அரசுக்கும் அவர்களுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது.

இந்தப் போராட்டமே வளர்ச்சியடைந்து கடந்த வருடம் யெமென் அரசைக் கவிழ்க்கும் நிலைக்குச் சென்றது.யெமெனின்  முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிக்கு விசுவாசமான யெமென் இராணுவத்தினரும் ஹவ்திக்களுடன் கை கோத்துக் கொண்டதால் அரசால் அவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போனது.

இவ்வாறு ஒரு வருடத்துக்கும் மேலாகத் தொடர்ந்த யுத்தத்தால் சுமார் 6,800 பேர் உயிரிழந்துள்ளதோடு 28 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு மூன்று தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்த நிலையில் மீண்டும் நான்காவது தடவையாக மற்றுமோர் ஒப்பந்தம் கடந்த வாரம் செய்துகொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு இடையே அமைதிப் பேச்சும் இடம்பெறவுள்ளது.

இந்த யுத்தம் மேலும் நீடித்தால் அது யெமெனுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளைக் கொண்டு வரும் என்பதால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யுத்தம் மேலும் நீடிக்கும் பட்சத்தில் ஹவ்திகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களத்தில் குதிக்கும் நிலை ஏற்படலாம்.அவ்வாறு நடந்தால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் யெமென் அரசுக்கு ஆதரவாகக் களமிறங்கும்.

இந்த நிலைமை யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தி-விரிவுபடுத்தி சிரியாவில் ஏற்பட்டது போன்றதொரு பாரிய அழிவை யெமெனில் ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

சிரியாவில் இதுவரை இடம்பெற்ற ஐந்து வருட யுத்தத்தால் 3 லட்சம் பேர் உயிரிழந்து அதன் பொருளாதாரம் 30 வருடங்கள் பின்னோக்கி நகர்ந்துள்ளது.ஆனால்,யெமெனில் இடம்பெற்ற ஒரு வருட யுத்தத்தால் இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த யுத்தம் மேலும் நீடித்தால் சிரியாவைப் போன்றதொரு நிலைமை யெமெனிலும் நிச்சயம் ஏற்படும்.

இதன் காரணமாகவே இந்த யுத்தத்தை இத்தோடு நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில்,இப்போது செய்யப்பட்டுள்ள நான்காவது ஒப்பந்தமாவது வெற்றியளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts

கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி

wpengine

ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளது.

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine