யாழ்-அங்கஜன் வைத்த பெயர் பலகையினை அகற்றிய தவிசாளர்

பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது,


கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.


இவ்வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது.


இந்தநிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து வீதி அதிகார சபைக்கு விரைவாக குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார்.


ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றுக்குச் சொந்தமான வீதியை மத்திய அரச நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக்காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் புனரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப்பலகையை அகற்றுமாறு பணித்திருந்தார்.


இதன்படி பிரதேச சபையால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அந்த முறைப்பாட்டை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகை தந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் அனுமதியின்றி வீதி அதிகார சபை புனரமைப்பதற்கு முயற்சித்தமை சட்டவிரோதம் எனவும், அதனாலேயே சபை ஒன்றுக்கு பகிரப்பட்ட அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்டப்பெயர்ப்பலகையை அகற்றியதாகவும், உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


மேலும், பிரதேச சபை என்பது அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இலகு என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது எனவும், அபிவிருத்திக்கு நாம் தடை அல்ல. ஆனால், அதனைச் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச் சொல்லும் பாங்குடன் மத்திய அரசின் நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares