யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் இன்று இணங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி யாழ்ப்பணம், செம்மணி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற மத போதனையை நடத்திய போதகர் சுவிஸ் திரும்பி சென்ற நிலையில் கொரோனா நோயாளியாக இணங்காணப்பட்டுள்ளார்.
அவருடன் நெருங்கிப் பழகிய இருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆராதனையில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைவாக குறித்த போதனையில் கலந்து கொண்ட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு சட்ட நேரத்திலும் விரைந்து செயற்பட்ட வவுனியா வடக்கு பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் புளியங்குளம் வடக்கு, முத்துமாரி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரையும், நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் வசிக்கும் இருவரும் என 8 பேர் இணங்காணப்பட்டு அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தனிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போதனையில் கலந்து கொண்டோர் மருத்து பரிசோதனைக்காக தமது பெயர் இருப்பிட விலாசத்தை 021-2217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
