மொட்டுக்கட்சியின் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகும்

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பெற்று தெரிவு செய்யப்பட்ட சோகா மல்லி என்ற பிரேமலால் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


சட்டமா அதிபரின் உத்தரவுக்கு அமைய பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குவதில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்திருந்தது. இதனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.


எனினும் 9வது நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்ததுடன் அதில் பிரேமலால் ஜயசேகரவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.


ஜயசேகர தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
எனினும் பிரேமலால் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மூன்று மாதங்களுக்குள் அந்த பதவிக்கான சத்தியப் பிரமாணத்தை செய்ய வேண்டும்.

அவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்யாது போனால், பிரேமலால் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும். அந்த பதவி இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியல் அடுத்த இடத்தில் உள்ளவருக்கு வழங்கப்படும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares