மைத்திரிக்கு எதிராக உளவியல் யுத்தம்

[ எம்.ஐ.முபாறக் ]
ஆட்சி மாற்றத்தின் பின் இந்த நாட்டில் ஒரு சுமூகமான-அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.இந்த அரசில் சில குறைபாடுகள் காணப்படுகின்றபோதிலும் மஹிந்த அரசுடன் ஒப்பிடுகையில் இந்த அரசு எவ்வளவோ மேல்.பொருளாதாரரீதியில் சில சிக்கல்கள் இப்போது மக்களுக்கு ஏற்படுள்ளபோதிலும்,அவை நிரந்தரமானவை அல்ல.ஆனால்,ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது மக்கள் நேய அரசு என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

இந்த அரசின் சரியான பாதையை-ஜனநாயக ஆட்சி முறையைச் சகித்துக்கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏதாவது செய்து இந்த ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிடுகின்றார்.இதற்காக  சுதந்திரக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியையும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்தியையும் பலவீனப்படுத்தும் சதி நடவடிக்கையில் நீண்ட காலமாக அவர் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம்.

மஹிந்த தலைமையில் புதிய கட்சி ஒன்றை உருவாகப் போவதாக சில மாதங்களாக கதைகள் உலாவுகின்றன.
தனக்கு ஆதரவாக நிற்கும்-கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்திருக்கும் சுதந்திரக் கட்சியின் சிலரைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதற்கு மஹிந்த முயற்சிக்கிறார்.

சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என்றும்  நாட்டு மக்கள் இந்த அரசின் மீது அதிருப்திகொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றும் கதைகளைப் பரப்பி இந்த நாட்டு மக்களையும் ஜனாதிபதியையும் உளவியல்ரீதியாக பலவீனபடுத்தும் வேலையை மஹிந்த முன்நின்று  நடத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

தங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு குழுவைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் கூட்டங்களையும் ஜனாதிபதி மைத்திரி கலந்து கொள்ளும் கூட்டங்களையும் குழப்புவதற்கும் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்துவதற்கும் மஹிந்த திட்டமிட்டு வருகின்றார் என அறிய முடிகின்றது.அதன் மூலம் இந்த அரசுக்கு எதிராக-ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டனர் என்றொரு மாயையை மஹிந்த நாட்டு மக்கள் மத்தியில்  ஏற்படுத்தப் போகின்றார் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களைக் கொண்டு குழப்பங்களை ஏற்படுத்துவதிலும் தனக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டிக்கொள்வதிலும் மஹிந்த கெட்டிக்காரர் என்பதை நாம் அறிவோம்.அவரது ஆட்சியில் இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.

அவரது ஆட்சிக் காலத்தில்  ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக-தனக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட   ஊடகங்களைப் பலி வாங்குவதற்காக அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட குழுக்களைக் கொண்டு ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு அந்நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.மகாராஜா ஊடக நிறுவனம் மீதான தாக்குதல்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இதற்கான பொறுப்பை மஹிந்த மக்களின் தலையில் சுமத்தினார்.தனது ஆட்சி மக்கள் நேய ஆட்சி என்பதால் அந்த ஆட்சிக்கு எதிராகச் செயற்படும் ஊடகங்களை மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனர் என்ற மாயையை மஹிந்த ஏற்படுத்தி இருந்தார்.

அதேபோல்,திவுநெகும சட்டமூலத்தை எதிர்த்த முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகவை பலி வாங்க மஹிந்த  வகுத்த திட்டத்துக்கான முழுப் பொறுப்பையும் அவர் மக்கள் மீதே சுமத்தினார்.

சிராணியை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது பஸில் ராஜபக்ஸவின் ஊடாகவும் மேர்வின் சில்வாவின் ஊடாகவும் மக்களை கொண்டு வந்து நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிறுத்தி சிரானிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்ய வைத்தார் மஹிந்த.

அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களுள் அதிகமானவர்களுக்கு சிராணி என்றால் யார் என்று கூடத் தெரிந்திருக்கவில்லை.சிலருக்கு அது என்ன பிரச்சினை என்று கூடத் தெரியவில்லை.இவ்வாறு சிரானியைப் பலி வாங்கிய அவரது செயலையும் பொது மக்கள்மீதே சுமத்தினார்.

இவ்வாறு மக்களைத் திரட்டியே எதிர்ப்பைக் காட்டி தனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்போல் மஹிந்த இருந்துவிடுவார்.அதேபோல்,தேர்தல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மக்கள் அலைமோதுவதாகக் நாட்டு மக்களுக்குக் காட்டுவதற்காக தங்களது ஆதரவாளர்களை அங்கு அழைத்துச் சென்று படம் காட்டுவார்.

இவ்வாறு தனது அரசியல் எதிரிகளையும் தனக்கு வேண்டாதவர்களையும் பலிவாங்குவதற்கு மக்களையே பயன்படுத்துவது மஹிந்தவின்  அரசியல் போக்காகும்.அந்த வரிசையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்காகவும் அவர் இவ்வாறான யுக்தியையே கையாளவுள்ளார்.

மே தினத்திற்குப் பிறகு சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பாடும் என்றும் மஹிந்த தலைமையில் புதிய கட்சி உருவாகும் என்றும்  மஹிந்த தரப்பால் தயாரிக்கப்பட்ட கதைகள் சிலநாட்களாக உலா வருகின்றன.

சுதந்திரக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் காலியில்  இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மஹிந்த தரப்பின் கூட்டம் கிருளப்பனையில் இடம்பெறவுள்ளது.காலியில் இடம்பெறும் கூட்டத்தை மக்கள் குழப்பக்க்கூடும் என்பதால் தான் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று சிறு பிள்ளைத்தனமாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்தக் கூட்டம் குழப்பப்படும் என்பதை மஹிந்த மறைமுகமாகத் தெரிவித்துள்ளதோடு வழமைபோல் அவர்தான் அந்த குழப்பத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பதும் தெரிகின்றது.

இவ்வாறான கூச்சல் குழப்பித்தின் ஊடாக மக்கள் பாரியளவில் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர் என்றொரு மாயையை மஹிந்த  தோற்றுவிக்க முற்படுகின்றார்.அத்தோடு,இவ்வாறான தொடர்ச்சியான கூச்சல்கள் மூலம் ஜனாதிபதி மைத்திரியையும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் அக்கட்சியின் ஆதரவாளர்களையும் உளவியல்ரீதியாகப் பலவீனப்படுத்துவதற்கும்  மஹிந்த முற்படுகிறார் என்பதையும்  இதன் மூலம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது.

மஹிந்தவின் கடந்த கால அரசியலை எடுத்துப் பார்த்தால் இவ்வாறான கூச்சல்,குழப்பம் மற்றும் வன்முறை போன்ற வழிமுறைகளின் ஊடாகவே அவர் ஆட்சியைக் கொண்டு நடத்தினார் என்பதை உணரலாம்.தொடர்ந்தும் அவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவே சிறிது காலம் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டார்.

உண்மையில் மஹிந்தவின் இந்தக் கூச்சல்,குழப்பம் நிறைந்த யுக்தியானது மைத்திரிக்கு எதிரான உளவியல்ரீதியான யுத்தமாகும்.இந்த யுத்தம் மூலம் ஒன்றுமில்லாததை இருப்பதாக இந்த நாட்டு மக்களுக்குக் காட்டுவதற்கு அவர்  முற்படுகின்றார்.

மஹிந்தவின் இந்த அரசியல் போக்கை முறியடித்து  கட்சியைக் காப்பாற்றுவதற்காக மே தினத்துக்குப் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சுதந்திரக் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares