பிரதான செய்திகள்

மூன்று மணித்தியாலங்கள் நடந்த போதும் அக்கூட்டத்தில் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மூன்று மணித்தியாலங்கள் நடந்த போதும் அக்கூட்டத்தில் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என அக்கட்சியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.


அடுத்துவரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கும் நோக்கில் நேற்று செயற்குழு கூடியது. எனினும் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியின் யாப்புக்கு ஆதரவாக வும் எதிராகவும், ஐதேக செயற்குழு இரண்டாக பிளவுபட்டிருந்ததாக தெரிகிறது. இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் அவருக்கு ஆதரவாக, நவீன் திசநாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் கபீர் காசிம், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, ரவி சமரவீர, சுஜீவ சேனசிங்க, அஜித் பெரேரா, ஏரான் விக்ரமரத்ன, டிலிப் வேதாராச்சி, நளின் பண்டார, போன்றோர் கூட்டணியின் யாப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இச் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. புதிய கூட்டணியின் பொதுச்செயலர் நியமனம், முடிவெடுக்கும் செயல்முறைகள், கூட்டணியின் செயலக முகவரி, உள்ளிட்ட பல விடயங்களில் எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன என்று ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பொதுச்செயலராக ஐதேக உறுப்பினர் ஒருவரே இருக்க வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, வரும் 5ஆம் திகதி கூட்டணியின் உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கும் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த உடன்பாட்டில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தாக இருந்தது. அதுவே, வாக்கெடுப்பு நடத்தும் முடிவை அவர் எடுப்பதற்கு காரணமாக அமைந்தது.
எனினும், வாக்கெடுப்பு நடத்தும் முடிவை, யாப்பை எதிர்த்தவர்கள் நிராகரித்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முடிவில் அக்கட்சியினர் இருக்கின்றனர் என்றும், அதற்கான தெளிவான முடிவுகளை கட்சியின் தலைமை கூடி ஆராய்ந்து எடுக்கும் என்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் நீடிக்கும் சிக்கலுக்கும் உரிய தீர்வினை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

wpengine

மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது- கண்டி முதல்­வர்

wpengine

றிஷாட்டின் கைதுக்கு எதிராக மு.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine