முஸ்லிம் மக்களை விற்று தமது பைகளை நிரப்பிக்கொண்ட முஸ்லிம் தலைவர்கள் கடந்த காலத்தில் இருந்தனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற முஸ்லிம் வர்த்தகர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இப்படியான முஸ்லிம் தலைவர்கள் எனது அரசாங்கத்திலும் இருந்தனர்.
எனக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்க நேரிட்டது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியலில் ஈடுபடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் புதிய கூரையை அமைத்து, தேர்தலில் போட்டியிட்டு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களை சந்திக்க பயம் என்பதால், கடந்த காலத்தில் தேர்தல்களை நடத்தவில்லை. இப்படி மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம் தலைவர்களின் ஆதரவும் கிடைத்து வந்தது.
தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் மக்களை பிளவுப்படுத்துவதாக அமைந்துள்ளன. அந்த சரத்துக்கள் மக்களை பிரிக்கின்றன. இதனால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற இணைந்துக்கொள்ளுங்கள்.
சிறிகொத்தவை கைப்பற்றுவதற்கு மாத்திரம் முயற்சித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள், நாட்டின் பிரச்சினைகளை தமது கட்சயின் தலைமையகத்துடன் சுருக்கிக்கொண்டுள்ளமை வருத்தத்திற்குரியது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

