முஸ்லிம் பெண்கள் புர்கா இலங்கை அரசு தடை செய்துள்ள விடயம் குறித்தது கடுமையான கண்டனம்

தீவிரவாத எண்ணங்களிலிருந்து மக்களை மீட்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி, சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. 

முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதன் மூலம் அவர்கள் தன்னிச்சையான முறையில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இணை அமைப்பான சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையை இலங்கை அரசு தடை செய்துள்ள விடயம் குறித்தது கடும் கண்டனத்தையும் சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இது சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளை மீறும் வகையில் காணப்படுவதாகவும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் செயலாகும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதிதீவிர மதவாதக் கொள்கையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக, அண்மையில் கொண்டுவரப்பட்ட வன்முறையுடன் கூடிய சமூக இணைப்பு மையங்கள் போன்றவை முஸ்லிம்களை தன்னிச்சையாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு ஏதுவாக அமையுமென அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த ஏற்பாடானது மனித உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமின்றி, அப்படி சட்டவிரோதமாகச் செயல்படுவோரைக் காப்பாற்ற அந்தச் சட்டம் வழி செய்வதாகவும், அந்த அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை உடனடியாக தனது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஆகியன தொடர்பில் தாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மரணங்கள், சித்திரவதை, சட்டவிரோத கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவது கவலையளிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழிமுறைகளை இலங்கை அரசு ஏற்படுத்தி  கொடுப்பதோடு, நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மையினருக்கும் நியாயமான, சுதந்திரமாக வழக்குகளை எதிர்கொண்டு நீதியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மக்களும் தமது சொந்த கலாச்சாரம் மற்றும் மத அடையாளங்களைப் பேணும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள, சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு இது மீறப்படுவது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

பெரும்பான்மையின் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில், இஸ்லாமியர்கள் மீது ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைக் கண்டு அஞ்சி, வெறுப்புணர்வு கொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் பேணப்படுவது தொடர்பில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குறித்த அமைப்பு, இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் தமது பிரச்சினைகளுக்கு உள்ளூர் வழிமுறைகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமே தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு வழிமுறைகள் மூலமே தீர்வுகாண வேண்டுமென அறிவுறுத்தியுள்ள அந்த அமைப்பு, அனைத்து உள்நாட்டுப் பிரச்சினைகளையும் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்வது சரியான விடயமாக அமையாது எனவும், சுயாதீனமான மற்றும் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares