முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

2015ஆம் ஆண்டு ‘செரெண்டிப்’ என்ற பெயரில் மீடியா உலகினுள் தன்னை அறிமுகப்படுத்திய இன்றைய UTV தொலைக்காட்சியானது டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பின்னைய காலத்தில் பரிணமித்திருந்தது.

2016 ஆம் ஆண்டு Udhayam TV எனும் பெயரில் தனது ஒளிபரப்பினை தொடங்கிய தொலைக்காட்சி அலைவரிசையானது, 2018 ஆம் ஆண்டு UTV என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகியது.

இது டயலாக் 23 வழியாகவும் 2018ஆம் ஆண்டு Terrestrial (UHF54) ஊடாகவும் Peo TV மூலமாகவும் UTV இனது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியமை மற்றுமொரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

இவ்வாறு தனது ஒளிபரப்பினை மேற்கொண்டு வந்த UTV அலைவரிசையானது கடந்த 8ம் திகதி முதல் கொழும்பு அதனை அண்டிய பிரதேசங்கள் UHF 54, Dialog (இலக்கம் 23), PEO TV (இலக்கம் 127) ஆகியவற்றில் இருந்து UTV HD நீக்கப்பட்டு அந்த அலை வரிசையில் சிங்கள சேவை ஒன்றின் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.

இந்த சிங்கள தொலைக்காட்சியினை தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமானவர்கள் நடத்தி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

UTV சிங்களத் தொலைக்காட்சியாக மாறியதா? அல்லது இனிவரும் காலங்களில் UTV என்று ஒன்று இல்லையா? சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஒளிபரப்பாகி வந்த UTV அலைவரிசையானது அரசியல் அழுத்தங்களால் கைமாறியதா? UTV ஏன் இந்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதனை நாம் தேடிப்பார்த்தோம்.

கடந்த நால்லாட்சி அரசாங்கத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் SATIS AGENCY எனும் நிறுவனத்திற்கு இந்த தொலைக்காட்சி அலைவரிசைக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையில் பொதுவாக தொலைகாட்சி அலைவரிசைக்கான FREQUENCY பெற்றுக் கொள்வது அவ்வளவு இலேசானதல்ல. அதுவும் தற்போது அது முடியாத காரியமும் ஆகும். நல்லாட்சி அரசில் அப்போது அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் இந்த அலைவரிசையினை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், இது ரிஷாதின் தொலைக்காட்சி என சமூக வலைதளங்களில் ஊடாக பிரபலமாக பேசப்பட்ட போதிலும், அவருடைய தொலைக்காட்சி என எங்கும் பதியப்பட்டிருக்கவில்லை. இது முற்று முழுதாக SATIS AGENCY என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியாகவே செயற்பட்டு வந்துள்ளது.

எனினும், இந்த அலைவரிசையை UTV இற்கு பெற்றுக் கொடுத்த பின்னணியில் ரிஷாத் பதியுதீனின் பங்களிப்பு இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சருக்கும் UTV இற்கும் ஏதும் நெருக்கமான தொடர்பு இருக்கலாம் என ஊகிப்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

UTV ஏன் தனது ஒளிபரப்பினை நிறுத்தி, சிங்கள ஒளிபரப்பாக மாற்றம் பெற்றது? சமூக ஊடகங்களில் பேசப்படுவது போல், ரிஷாத் பதியுதீனால் பசில் ராஜபக்ஷவுக்கு விற்கப்பட்டதா? என்பது தொடர்பில் சற்று விரிவாக நாம் விடயத்திற்குள் சென்று ஆராய்ந்தோம்.

அங்கு எமக்கு பல தகவல்கள் கிடைத்தன.

அவற்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முதல், ஒரு விடயத்தினை பதிவு செய்கிறோம்.

இலங்கை நாட்டினை பொருத்தமட்டில், ஹிரு டிவி, தெரண டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகள் முதல் சியத டிவி வரையில் அவர்களது ஆரம்ப அனுமதி பத்திரம், ஒரு அரசியல்வாதி அல்லது அமைச்சர் ஒருவரின் அனுசரணையுடனே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அரசியவாதிகளது அனுசரணை இல்லாமல் இலங்கையில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றினை ஆரம்பிக்க முடியாது என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.

இப்போது விடயத்தினை அலசுவோம்,

மேலே கூறியது போல் 2016ம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பரிணமித்த உதயம் டிவி 2017 ஆம் ஆண்டு டயலாக் வழியாகவும் 2018ஆம் ஆண்டு UHF54 ஊடாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆரம்பித்தது.

அப்போது UTV இனது டிரான்ஸ்மிட்டர் (TRANSMITTER) கொழும்பு 03 இல் அமைந்துள்ள HNB டவரில் பொருத்தப்பட்டிருந்தது. அந்த டிரான்ஸ்மிட்டர் இறக்குமதியிலும் கூட ஏகப்பட்ட பண மோசடிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு இருக்க கடந்த ஆகஸ்ட் 08ம் திகதி வரையான UTV இனது பயணத்தினை மூன்று கட்டங்களாக பார்க்கலாம்.

· ஆரம்பம் முதல் 2019ம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதி

· 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதி

· 2021 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரையிலான காலப்பகுதி

Ø ஆரம்பம் முதல் 2019ம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதி

ஆரம்பம் முதல் 2019ம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியானது UTV இனது காலமாகும். தொலைகாட்சி என்பதனை புதிய வியாபாரமாக SATIS AGENCY இனால் ஆரம்பிக்கப்பட்ட காலம். அப்போது பல அனுபவம் இல்லாததால் பல தேவையில்லாத செலவுகள் இடம்பெற்றன. அதேபோல் ஊழியர்கள் பலருக்கு அது முதல் தொலைகாட்சி அனுபவமாக இருந்தது.

ஆனாலும் குறித்த காலப்பகுதியில் ITN-VASANTHAM தொலைக்காட்சிகளில் சிரேஷ்ட தயாரிப்பாளராக பணியாற்றிய ஒருவரை அலைவரிசை பிரதானியாக அமர்த்தி, ITN ஊடக வலையமைப்பை முதல் தரத்திற்கு உயர்த்திய அநுர சிறிவர்த்தன’வை பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) அமர்த்தியும் உதயம் டிவி என்பதனை 2018ம் ஆண்டு முதல் UTV HD என பெயர் மாற்றம் செய்து தமிழ் தொலைக்காட்சி தரப்படுத்தலில் ஒரு குறிப்பிட்டதோர் முன்னேற்றத்தினை UTV அடைந்தது.

இளம் ஊழியர்கள் குழாம் அநுர சிறிவர்தனவின் வழிகாட்டல் என்பன இணைந்து 2018/2019ம் ஆண்டுகளில் UTV, ஒரு நல்ல முன்னேற்றம் கண்டுவரும் தொலைகாட்சியாக மாற்றமடைந்ததுடன், பல அரச தொலைக்காட்சி விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

அதன்போது UTV நிறுவனத்துடன் இணைந்து கொள்ள பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் கடமையாற்றியவர்களுடனும் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி முஸ்லிம் ஊடகம் என்ற வகையில் UTV சொல்லெனா சவால்களுக்கு முகங் கொடுக்க நேரிட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சில தீவிரவாதிகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் பலி வாங்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இதில் UTV இற்கு கை கொடுத்த முதலீடுகளும் இடை நிற்கத் தொடங்கியதாக கூறப்படுகின்றது.

Ø 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதி

அவ்வாறு இருக்க திடீரென UTV இனது முகாமைத்துவம் SATIS AGENCY இனால் INFINITY MEDIA எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 2019 ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முக்கிய பெரும்பான்மை அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர்களால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

SATIS AGENCY நிறுவனத்திற்கும் INFINITY MEDIA நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும், ஒப்பந்தத்தின்படி முதல் வருடம் முகாமைத்துவ செலவுகள் முழுவதையும் INFINITY MEDIA நிறுவனம் செய்வதாகவும் இரண்டாம் வருடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை INFINITY MEDIA நிறுவனம் SATIS AGENCY நிறுவனத்திற்கு வழங்கவும் இணக்கம் காணப்பட்டதாக அறியக் கிடைத்தது.

அதன்பின்னரான விடயங்கள் தொடர்பாக பலரும் பலவிதமாக கூறுவதை அறியக் கிடைத்தது. அதில் எமக்குக் கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களின் படி, தொலைகாட்சி வியாபாரம் பற்றி சிறிதும் தெரியாத INFINITY MEDIA நிறுவன உரிமையாளர்கள் ஒரு ஆரம்ப நிலை தொலைகாட்சியான UTV மூலம் பெரும் பணம் உழைக்கலாம் என்ற தப்புக்கணக்கு போட்டு SATIS AGENCY நிறுவனத்திற்கு இலாபத்தில் பங்கு வழங்காது குறிப்பிட்ட ஒரு தொகையினை வழங்கும் வகையில் தமக்கு சாதகமான ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டனர்.

எனினும் SATIS AGENCY 2019ம் ஆண்டு வருகின்ற போது இந்தத் தொலைகாட்சி மூலம் வருமானம் ஈட்டுவது தொடர்பிலான சவால்களை ஓரளவு தெரிந்து வைத்திருந்ததால் அவர்களும் ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

மூன்றே மாதங்களில் நெருக்கடி ஆரம்பிக்கத் தொடங்கின. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அந்தக் காலகட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் விவகாரம் மற்றும் தேர்தல் பல காரணங்களால் தொடர் தோல்வி கண்ட INFINITY MEDIA நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது திண்டாடியது.

அதற்கு பிரதான காரணமாக தேர்தல் காலங்களில் தனிப்பட்ட ரீதியாக அரசியல் கட்சியொன்றுக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்கியமை யாவரும் அறிந்ததே, என்றும் நடுநிலைமை பேணிய UTV திடீரென நடுநிலைமை இழந்து தனியான பயணப்பாதையினை தேர்ந்தெடுத்தது. கண்முன்னே சரிவினை நோக்கிச் செல்வதனைக் கண்ட INFINITY MEDIA ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு தமக்கு இந்தத் தொலைகாட்சி வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக SATIS AGENCY இற்கு அறிவித்திருந்தது.

எனினும் நிலைமையினை கருத்திற்கொண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல், ஒரு வருட பூர்த்தியின் பின்னர் SATIS AGENCY நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையினை வழங்கத் தேவையில்லை எனவும் நிர்வாகத்தினை நடத்திச் செல்லுமாரும் இலாபமீட்டும் போது அதுபற்றி தீர்மானிக்கலாம் என்றும் SATIS AGENCY நிர்வாகத்தினர் INFINITY MEDIA நிர்வாகத்திற்கு அறிவித்திருந்ததற்கு ஏற்ப INFINITY MEDIA நிறுவனம் UTV இனை பொறுப்பேற்றது.

எனினும், தொலைகாட்சி முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் பல தேவையில்லாத செலவுகளை செய்த INFINITY MEDIA, தொலைக்காட்சியின் பிரதான தொழில்நுட்ப செயற்பாடுகளில் ஒன்றாக கருதப்படும் டிரான்ஸ்மிட்டர் (TRANSMITTER) இற்கான செலவுகளை கூட செய்யத் தவறியது.

அத்துடன் கொவிட் தொற்று நிலைமை, அதிக சம்பளத்திற்கு செய்தித்துறையில் அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகத்துறையினர் ஒருவரையும் வசந்தம், ITN தொலைகாட்சிகளில் சந்தைப்படுத்துதல் பிரதானி ஒருவரையும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் கூட INFINITY MEDIA இனால் செலுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், அந்தக் காலப்பகுதியில் INFINITY MEDIA, UTV ஊழியர்களுக்கு EPF/ETF கட்டணங்களை கூட செலுத்தத் தவறியுள்ளது. இதனையும் முற்று முழுதாக SATIS AGENCY நிறுவனமே பொறுப்பேற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. (ஆதாரங்கள் உள்ளதாக கூறப்பட்டது)

INFINITY MEDIA நிறுவனத்தின் அனுபவமற்ற தன்மையினால் UTV பல சவால்களை சந்தித்து இன்று UTV தனது ஒளிபரப்பினையும் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

INFINITY MEDIA நிர்வாகம், தான் இணைத்துக் கொண்ட ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்காதது மட்டுமல்லாது ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளும் (சுமார் 4 மாதகாலமாக) அதன் இறுதிக் காலகட்டத்தில் வழங்கப்படவில்லை. இவற்றினையும் சட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் SATIS AGENCY நிறுவனமே பொறுப்பேற்றதாக கூறப்படுகின்றது.

அத்துடன் INFINITY MEDIA நிறுவனமானது UTV நிர்வாகத்தினை மீண்டும் SATIS AGENCY நிறுவனத்தில் ஒப்படைத்து விட்டு செல்லும் போது, மின்சாரக்கட்டணம், நீர்க்கட்டணம், பாதுகாப்பு காவலர் சேவைகள் (Security Guard Services) உட்பட சுமார் 10 மில்லியன் அளவிலான கடன்கள் செலுத்த வேண்டியதாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

ஒரு தவறான எதிர்பார்ப்பு, பிழையான முகாமைத்துவம் காரணமாக பல சிக்கல்களுக்குள் சிக்கி பல வழக்குகள் கூட நிலுவையில் உள்ள நிலையில், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல கடன் பொறுப்புக்களுடன் UTV மீண்டும் SATIS AGENCY இடம் ஒப்படைக்கப்பப்பட்டது.

இதில் முக்கியமானது தான், திரைப்பட அனுமதி குறித்த வழக்கு. அதாவது இந்திய தமிழ் திரைப்படங்களுக்கு இலங்கையில் உரிமம் இல்லாதவிடத்து, அதனை ஒளிபரப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். அதன்படி, இலங்கையில் உரிமம் பெறப்பட்டவர்களால் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் SATIS AGENCY நிர்வாகமே தற்போது பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதன் பெறுமதி சுமார் 3 – 4 மில்லியன்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (தேவையேற்படின் ஆதாரங்களை முன்வைப்போம்).

Ø 2021 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரையிலான காலப்பகுதி

இவ்வாறு இருக்க இந்த தொலைக்காட்சியினை இஸ்லாமிய தொலைக்காட்சியாக ஒளிபரப்ப முன்வந்தால், முஸ்லிம் தனவந்தர்கள் இதற்கு உதவி செய்வார்கள் என சிலரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, SATIS AGENCY இற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடனான ஈடுபாடுகள் இருந்தது என கூறப்படுவதாலோ என்னவோ UTV நூறு வீத இஸ்லாமிய அலைவரிசையாக கடந்த 8 மாத காலமாக ஒளிபரப்பாகியது.

செய்திகளும், இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் மாத்திரமே பிரதானமாக ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் ஜனாஸா பிரச்சினை போன்ற முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சனைகளின் போது UTV பல சவால்களுடன் சமூகத்திற்காக குரல் கொடுத்தது. எனினும், இதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் கூட UTV இனை கொண்டு நடத்தக் கூடிய அளவில் விளம்பரங்களை வழங்கவில்லை.

முஸ்லிம் ஊடகம் இல்லை என மேடைகளிலும் பெரும்பான்மை மக்களிடமும் தமது வருத்தத்தினை தெரிவிக்கும் முஸ்லிம் தனவந்தர்களே கை விரித்தனர். முஸ்லிம் தனவந்தர்கள் குழுவொன்று SATIS AGENCY நிறுவனத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை கோரியது. அதனை SATIS AGENCY நிறுவனமும் ஏற்றுக் கொண்டு சந்தர்பமும் வழங்கியது.

அதாவது UTV தொலைக்கட்சியினை முஸ்லிம் ஊடகமாக மட்டும் பயன்படுத்தவும், இஸ்லாமிய விழுமியங்களுடன், குறிப்பாக திரைப்படம் மற்றும் பாடல்களை நிறுத்தி தனி முஸ்லிம் ஊடகமாக முன்னெடுத்து சென்றால் அவர்கள் உதவுவதாக கூறியிருந்தமைக்கு அமைய SATIS AGENCY நிறுவனமும் அதற்கு சம்மதித்து முஸ்லிம் பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கின.

எனினும் அதில் வாக்குறுதி அளித்திருந்த முன்னணி முஸ்லிம் தனவந்தர்களில் இருவர் மாத்திரமே இறுதியில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றினர். ஏனையவர்கள் அதில் இருந்தும் கழன்று சென்றனர். (தேவையேற்படின் தனவந்தர்களது பெயர்கள் முன்வைக்கப்படும்). எனினும், இறுதி முயற்சியாக ஒரு கட்டத்தில் SATIS AGENCY நிர்வாகத்தினர் UTV இனை கைவிட மனமில்லாது இதனை அறக்கட்டளை நிறுவனமாக நடாத்திச் செல்ல முன்வருமாறு முஸ்லிம் தனவந்தர்களிடம் வேண்டினர். அதற்கும் யாரும் செவிசாய்க்கவில்லை.

குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா குழுவினர், அனைத்து அமைப்புக்களும் உள்ளடங்களாக அவற்றின் உலமா தலைமைகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என சமூகத்தில் அந்தஸ்துள்ள பலர் கூட SATIS AGENCY நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துச் சென்றனர். ஆனால் அவை கூட வெறும் பேச்சுக்கள் மட்டுமே. அவை அவர்களது செயல் முறையில் இருக்கவில்லை. இப்போது மட்டும் முஸ்லிம் ஊடகத்தின் தேவை இருக்கும் போது அரசியல் தலையீட்டில் இது கைமாறப்பட்டதாகவும் அழுத்தங்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுவதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க, இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகள், முஸ்லிம்களின் தேவைகள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், உண்மைக்கு உண்மையான செய்திகளை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தூய நோக்கோடு; ஒரு ஊடகம் அவசியம் என்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு, SATIS AGENCY இலங்கையில் உள்ள தனவந்தர்கள் மற்றும் அரபு நாடுகளில் உள்ள செல்வந்தர்களிடத்தில் தொலைக்காட்சியினை ஆரம்பிப்பதற்கு வைப்பு பணமாக சுமார் 300 கோடி ரூபா தேவையான நிலையில் 2500 கோடி ரூபா பணங்களை வசூலித்ததாக சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக் உலா வந்தன.

இது தொடர்பில் SATIS AGENCY இடம் வினவிய போது, அரபு நாடுகளில் உள்ள செல்வந்தர்களிடமும் அரபிகளிடமும் உதவி கோரியமையும் அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றமையும் உண்மை என்றும், ஆனால் முதலீடுகளோ நிதி உதவிகளோ இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் ஆதார பூர்வமாக இது தொடர்பில் எம்மிடம் ஆதாரங்களை முன்வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருக்குமாயின் முன்வைக்குமாறு SATIS AGENCY தரப்பினர் எம்மைக் கோரியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான நிலையில், ஊழியர்களின் சம்பளம் கூட SATIS AGENCY இனால் வழங்கப்பட்டது. நிலமை இவ்வாறு இருக்க SATIS AGENCY ஒரு தனியார் நிறுவனமாக இருந்து சமூகத்திற்கான ஒரு அலைவரிசையாக UTV இனை தொடர்ந்தும் வழிநடத்தவே முயற்சியினை மேற்கொண்டது. அது தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கியதால் அதன் வியாபார முறையினை மாற்றி புதிய முதலீட்டாளர்களை இணைத்துக் கொண்டு மும்மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கக் கூடிய வகையில் புதிய தொலைக்காட்சி அலைவரிசையாக பரிணமிக்கவுள்ளது.

இந்த அலைவரிசையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக சிரச, ஹிரு போன்ற தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு (ENTERTAINMENT) நிகழ்ச்சிகளுக்கு பிரதான மூலகர்த்தாவாக இருந்த நிலேந்திர தேஷப்பிரிய இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொலைக்காட்சியின் பின்னால் பசில் ராஜபக்ஷ உள்ளாரா என்பது உறுதியாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு பின்னர் UTV இற்கு என்ன நடக்கும் என சற்று தேடிப்பார்த்தோம். UTV சமூகத்திற்கான ஊடகமாக தொடர்ந்தும் செயற்படும் என அங்குள்ளவர்களால் கூறப்பட்டது. அத்துடன் புதிய நிறுவனம் ஒன்றின் கீழ் UTV DIGITAL மற்றும் CABLE அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

UTV எவ்வாறு மீண்டும் தனது ஒளிபரப்பினை தொடங்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்குப் பின்னரும் தனவந்தர்கள், விளம்பரதாரர்கள் தங்களுக்கு முஸ்லிம் ஊடகம் இல்லையா என கேட்பதை விட்டு தானாக முன்வந்து முஸ்லிம்களுக்கான ஊடகமாக திகழும் UTV இனை கொண்டு நடத்த உதவுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

(குறிப்பு: எமது தேடலில் இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் உண்டு, சில கோரிக்கைகளுக்கு அமைய அவை இங்கு பிரசுரிக்கப்படவில்லை. தேவையேற்படின் எதிர்வரும் காலங்களில் பிரசுரிப்போம்)

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares