முஸ்லிம்கள் தொடர்பான போலிப் பிரச்சாரங்கள்! அமைச்சர் றிசாத் பிரதமரை சந்திக்க முடிவு

(சுஐப் எம்.காசிம்)

சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன என்றும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போலியான இணையத்தளங்கள் மற்றும் முகநூல்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இத்தகைய போலியான, பொய்யான, வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. எனினும், தற்போது அவை முனைப்படைந்து, மிகத்தீவிரமாக செயலுருப்படுத்தப்பட்டு வருவதாகவும், அமைச்சர் றிசாத் சாகல இரத்நாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஆண்டாண்டு காலமாக நல்லுறவுடன் வாழ்ந்து வருபவர்கள். அந்நியோன்ய பிணைப்பைக் கொண்டவர்கள். தாய் நாட்டுக்கு எப்போதுமே விசுவாசமாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து வருபவர்கள். அவ்வாறான ஒரு சமூகத்தை சிங்கள சகோதரர்களிடம்  இருந்து அந்நியப்படுத்துவது இவர்களின் உள்நோக்கம். சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைத்து, எதனையோ சாதிக்க இவர்கள் முனைகின்றனர்.

வில்பத்து விவகாரம், ஹலால் உணவு, பர்தா ஆகியவற்றை கையிலெடுத்து, முஸ்லிம்களை நோகடிக்கச் செய்த சில கூட்டங்களுக்கு இவ்வாறான போலி ஊடகங்கள் முன்னர் துணை செய்தனர்.

எந்தவொரு சம்பவத்திலும் முஸ்லிம் ஒருவர் தொடர்புபட்டிருந்தால், அதனை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடாகச் சித்தரித்து, மேலும் திரிவுபடுத்தி ஊடகங்கள், மீண்டும் மீண்டும் அவற்றை வெளிக்காட்டி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் எடுத்துரைத்தார்.

இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட சாகல இரத்நாயக்க தானும், அமைச்சர் றிசாத்தும் பிரதமரை விரைவில் சந்தித்து, இவ்வாறான ஊடகங்கள் தொடர்பில், தீர்க்கமான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் முடிவெடுப்போம் என உறுதியளித்தார்.

இதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த முஸ்லிம்கள் தொடர்பான, இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை எவ்வாறு கையாள்வது? என்பது குறித்து முஸ்லிம் சட்ட வல்லுனர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் முடிவு செய்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares