முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி -அமைச்சர் றிஷாட்

(சுஜப் எம். காசிம்)

மன்னர் ஆட்சி தொடக்கம் இன்றைய ஆட்சிவரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக இணக்கத்துடனும் நடுநிலைமை பேணும் தன்மையுடனும் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களை மாற்று இனங்களுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில சமூக வலைத்தளங்கள் திட்டமிட்டு செயலாற்றுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேதனை தெரிவித்தார்.

புத்தளம் மதுரங்குளி அர்-றஷீதிய்யா அரபுக்கல்லூரி பட்டமளிப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்துவருபவர்கள் அரசியல் பணிகளிலும் அவர்கள் தமது தனித்துவத்தை பேணிவருவதுடன் மற்றைய இனங்களுடன் முரண்படாதவகையில் கருமாற்றிவருபவர்கள் சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்காக நேரான வழியில் நேர்மையான முறையில் வெளிப்படையாக போராடிவருபவர்கள்.

அவர்கள் குறுக்குவழியை என்றுமே நாடியதுமில்லை, அதில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களும் அல்லர், ஆட்சியை கவிழ்ப்பதற்கோ, அரசாள்பவர்களை வீழ்த்துவதற்கோ, அவர்கள் துணைபோனவர்களும் அல்லர் அவ்வாறான ஒரு சமூகத்தை இக்கட்டான நிலைக்குள் ஆளாக்கி அவர்களைக்கொச்சைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எம்மிடம் ஏற்படும் ஜக்கியமே தகுந்த பதிலைக்கொடுக்க முடியும்.0a30b0e8-068a-4a4b-b7a3-d302ae2268ad
டீ.பி ஜாயா தொடக்கம் மர்ஹூம் அஸ்ரப் மற்றும் இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள் வரை எப்போதுமே முஸ்லிம்களை சரியான தடத்தில் வழிநடத்தி வந்தவர்களே, முஸ்லிம்களின் பேரியக்கமான ஜம்மியதுல் உலமா அவர்களை நேர்வழியில் மசூராவின் அடிப்படையில் வழிநடாத்திவருகின்றது, இரண்டு பேரினவாத இளைஞர்களும் ஆயுதம் தாங்கியபோது முஸ்லிம் இளைஞர்கள் வழிதவறவில்லை இனியும் வழிதவறப்போவதுமில்லை.
மத்ரஸாக்கள் உரிய இலக்கை அடைவதற்கு அவற்றை நிர்வகிப்பவர்கள் திட்டமிட்டுபணியாற்றவேண்டும்.

முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஜம்மிய்யாவும் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு அதிகம் உண்டு மார்க்ககல்வியுடன்  உலகாயதகல்வியும் வழங்கப்கட்டு தொழில்நுட்ப விடயங்களும் அதில் புகுத்தப்பட்டால் எதிர்கால உலமாக்களின் வாழ்க்கை வளமாகும்.
வீதிகளில் மாணவர்களை அலையவைத்து கலண்டர்களை விற்பனை செய்து பணம்சேர்க்கும் நடைமுறைகளை சில மத்ரஸாக்களிடம் காண்கின்றோம் இளம் உலமாக்கள் இவ்வாறு கையேந்திப்பழக்கப்பட்டால், வாழ்க்கை முழுவதும் கையேந்தவேண்டிய பழக்கத்துக்கு அவர்களை ஆளாக்கிவிடும். எனவே கடைக்குக்கடை கலண்டர்விற்கும் கலாசாரம் நமக்குவேண்டாம், தனவந்தர்களும், வசதிபடைத்தவர்களும் இந்த விடயத்தில் தமது அக்கறையை செலுத்தினால் இந்த அவல நிலையில் இருந்து மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும்.

இன்று விரும்பியோ,விரும்பாமலோ நமது சமூகத்துக்குள் வட்டி ஊடுருவியுள்ளது, சிறு சிறு இயக்கங்கள் உதவி என்ற போர்வையில் ஊருக்குள்புகுந்து வட்டியை உறிஞ்சிவருகின்றன. பெண்களில் பலர் இதற்குள் சிக்கி திண்டாடுகின்றனர். இந்த நிலையில் இருந்து நமது சமூகத்தை காப்பற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நமக்கு உண்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares