முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்த வேண்டும்! பௌத்ததேரர் அரசை எச்சரித்தார்.

சுகாதார அமைச்சில் ஏற்படுத்தப்படுகின்ற முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்தாவிட்டால் ஜெனீவா, உலக தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் உட்படச் சர்வதேசத்திடம் முறையிடுவோம் எனப் பௌத்ததேரர் ஒருவர் அரசை எச்சரித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பல துறைகளில் இன்று தொழிற்சங்கப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் சுகாதாரத்துறையில் மாத்திரம் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படக்கூடாது என்றாலும், அங்கும் இன்று தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும் அளவுக்கு இலங்கை மாறிவிட்டது.

இதற்குச் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தான் காரணம். சுகாதார அமைச்சர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஏற்ற வகையில் செயற்படுகின்றார்.

ஏனைய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்யவிடாமல் அமைச்சர் தடை செய்கின்றார். சுகாதார அமைச்சின் பலவீனத்திற்கு அமைச்சரே காரணமாகிவிட்டார். இலங்கை அரச தலைவரும் இன்று அதற்கு ஏற்ற வகையில்தான் செயற்படத் தொடங்கியிருக்கின்றார்.

ஜே.ஆர் ஜயவர்தன அரச தலைவராக இருந்தபோது எமது தொழிற்சங்கத்திற்கு எதிராக ஓரவஞ்சகத்தை செய்தபோது அதற்கெதிராக நாங்கள் உலக தொழிலாளர் அமைப்பிடம் முறையிட்டோம். இறுதியில் எமக்கே வெற்றி கிடைத்தது.

அந்த வகையில் தற்போது சுகாதார அமைச்சில் ஏற்படுத்தப்படுகின்ற முறைகேடுகள், ஓரவஞ்சகத்தை உடன் நிறுத்தாவிட்டால் ஜெனீவா, உலக தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் உட்படச் சர்வதேசத்திடம் முறையிடுவோம். சுகாதார அமைச்சு இந்த அளவுக்குப் பரிதாபகரமான, பலவீனமான அமைச்சாக மாறிவிட்டது.

இதற்குச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிதான் காரணம். அவரால் திறம்படச் செயற்பட முடியாவிட்டால் தயவுசெய்து பதவியை விட்டு விலகும்படி கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares