250 மில்லியன் ரூபா குறித்து விரிவான விசாரணை வேண்டும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலம் அகதி வாழ்க்கை நடத்திய முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பல கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டமை அறிந்ததே.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழிருந்த மீள்குடியேற்ற செயலணி 2018 ஆம் ஆண்டு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தது.
எனினும் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் செயற்பட்டு வந்த சட்ட ரீதியற்ற அமைச்சரவையின் கீழ் பிரதியமைச்சராக இருந்த வன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் செயலணியின் நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபா நிதியை தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்நிதியில் வவுனியாவுக்கு 106 மில்லியன் ரூபாவும் மன்னாருக்கு 74 மில்லியன் ரூபாவும் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்கென ஒதுக்கீடு செய்துள்ளார்.
மீள்குடியேற்ற செயலணியின் நிதியிலிருந்து மன்னாரில் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கப்படவிருந்த இறுதித் தருவாயில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியதால் அவை இடைநிறுத்தப்பட்டன.
எனவே புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும் மீள்குடியேற்ற செயலணியிலிருந்து சட்ட விரோதமாக சீரழிக்கப்பட்ட நிதி குறித்து விரிவான விசாரணை நடத்தி அந்நிதி மீள ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
– முகுசீன் றயீசுத்தீன் –