மாகாண சபைகளை ரத்துச் செய்து சமஷ்டிக் கோரிக்கையை ஒழிப்போம்! கெப்பிடியாகொட ஸ்ரீவிமல தேரர்

மாகாண சபைகளை ரத்துச் செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஒழிக்க முடியும் என்று கெப்பிடியாகொட ஸ்ரீவிமல தேரர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பேராதனை, கெடம்பே, ராஜோபவனாராமாதிபதி கெப்பிடியாகொட ஸ்ரீ விமல தேரர் இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர் படிப்படியாக சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த அரசாங்கத்தின் ஊடாக சமஷ்டி ஆட்சியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருப்பது தெரிகின்றது.

மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான சிவாஜிலிங்கம் இளைஞர்களை உசுப்பேற்றி மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்க தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றார்.

அதே நேரம் இந்தியா அதிகாரப் பரவலாக்கல் ஊடாக இந்த நாட்டை தொடர்ந்தும் தனது காலடியில் வைத்திருக்க முயற்சி செய்து வருகின்றது.

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஒரு சமஷ்டி பிராந்தியமும், மலையகத்தில் ஒன்றும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முஸ்லிம்கள் கிழக்கில் சமஷ்டி கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் தெற்கில் அனைத்து மக்களும் இணைந்து வாழும் நிர்வாக முறை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறான கோரிக்கைகள் அர்த்தமற்றவையாகும். இந்தச் சிறிய நாட்டை பிளவுபடுத்த முடியாது.

இவ்வாறான கோரிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் மாகாண சபை முறையை ரத்துச் செய்வதன் ஊடாக சமஷ்டி கோரிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares