மன்னார் – எருக்கலம்பிட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு பெற்ற இருவர்

மன்னார் – எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற இருவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ‘போதையற்ற புதிய கிராமத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி பள்ளிவாசல்களின் நிர்வாகம், சமூக அபிவிருத்தி சங்கங்கள், அமைப்புகள், ஜனாசா நலன்புரிசங்கம் மற்றும் கிராமத்தின் ஆன்மீகத்தலைவர்கள், கல்விமான்கள், சமூக நலன் விரும்பிகள், கிராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் இணைவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை தடுக்கும் பல்வேறு வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்கான புனர்வாழ்வு மையம் கடந்த 20.09.2020 அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு மையத்தில் 9 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனை சேவைகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்கள் என்பன இடம்பெற்று வந்துள்ளன.குறித்த 9 நபர்களில் புனர்வாழ்வு பெற்ற இருவர் நேற்று புனர்வாழ்வு மையத்தில் இருத்து உத்தியோகபூர்வமாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரி கலந்து கொண்டதுடன் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares