மன்னாரில் பல லச்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா,மஞ்சள்

மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூட்டைகளை நேற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதற்கமைவாக மன்னார் – வங்காலை கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைத்திருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.


புலனாய்வுத்துறையினரின் இரகசிய தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று மாலை விசேட பொலிஸ் குழுவினர் குறித்த கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125.8 கிலோகிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் ஒரு கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.


மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 154.5 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன்போது அங்கிருந்து 2250 மில்லிகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூட்டைகள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதோடு, குறித்த நபர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.


இதேவேளை வங்காலை – நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் ஆயுர் வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் வைத்து நேற்று இரவு 33.65 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேகநபர்களை வங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு 29 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares