மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் நீர் பௌசர் ஒன்றை தற்காலிகமாக தீ அணைப்பு வாகனமாக பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபைக்குச் செந்தமான பௌசர் வாகனம் ஒன்றை அதி வேகத்துடன் நீரை பாய்ச்சக்கூடிய வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீ அணைப்பதற்காக தயார் செய்யப்பட்ட குறித்த தீ அணைப்பு பௌசர் வெள்ளிக்கிழமை காலை பரிசோதிக்கப்பட்டது.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோர் இணைந்து பரிசீலனைகளை மேற்கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,
மன்னார் மாவட்டத்தை பொறுத்த வகையில் தீ அணைப்பு இயந்திரம் இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளது. தீ அணைப்பு பிரிவு மற்றும் தீ அணைப்பு இயந்திரம் போன்றவற்றை மன்னார் மாவட்டத்தில் ஏற்படுத்த 2016 ஆம் அண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை மன்னார் நகர சபையின் செயலாளர் அவர்களினால் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
2018 ஆம் ஆண்டு மன்னார் நகர சபையை நாங்கள் பொறுப் பேற்றுக் கொண்ட நிலையில் உரிய அதிகாரிகள், அமைச்சருக்கு பல கடிதங்களை அனுப்பி உள்ளோம்.
இறுதியாக கூட உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களுக்கு கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் இவ்விடையம் தொடர்பாக தெரியபடுத்தினோம். நேரடியாக ஒரு மகஜரையும் கையளித்திருந்தோம். மகஜரை கையளித்த போது எங்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கினார்.
மன்னார் நகரசபை, முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பு பிரதேச சபை போன்றவற்றிற்கான தீ அணைப்பு படைப்பிரிவுக்கான இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் அதனை கையளிப்போம்.
தற்போது தேர்தல் காலம் என்பதினால் அதனை வழங்க முடியாத நிலை உள்ளது. வெகுவிரைவில் எமக்கு கிடைக்கும் என்ற வாக்குறுதியை முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் திடீர் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றது. தீயை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
எமது நீர் பௌசர் மூலமாக நீரின் வேகத்தை அதிகரித்து தீ விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். அதற்கமைவாக வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாரில் எந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும் மன்னார் நகர சபையை உடனடியாக தொடர்பு கொண்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
