பிரதான செய்திகள்

மன்னாரில் தாயின் அன்பு கிடைக்காமையால் மாணவி தற்கொலை சோகம்

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.

தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதன்போது மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாணவியின் உடலம் அதே புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.

இதன் போது 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும், தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும், அம்மா அம்மா என்று தான் அன்பாக சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும், தொடர்ந்தும் தனக்கு துரோகம் செய்ய நினைப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் அன்பு கிடைக்காமையினால் மாணவியின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அனைவர் மனதையும் வேதனை ஏற்படுத்தும் விதமாக மரணம் அமைந்துள்ளது.

Related posts

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த கட்சி

wpengine

2023ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

wpengine

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine