பிரதான செய்திகள்

மன்னாரின் மனித எலும்புக்கூடுகளின் புளோரிடாவிற்கு அனுப்பி வைப்பு

மன்னாரில் மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் 122ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்தது.

இந்நிலையில் அவற்றை சீர் செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேளி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு இம்மாதம் 30ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும். மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வசதி

wpengine

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு 6 பேர் கைது .!

Maash

இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணங்களை வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

wpengine