மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் நேற்று புதன்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி முள்ளிவெட்டவான் பகுதியில் மண் அகழப்பட்டு சட்ட விரோதமான முறையில் வெளிமாவட்டங்களுக்கு அடைக்கப்பட்ட லொறிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது.
நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட லொரியில் சட்ட விரோதமான முறையில் மண் வெளி மாவட்டங்களுக்கு பல இலட்சம் ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு மண் அகழ்வில் ஈடுபட்ட கும்பலினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழி மறித்து மிரட்டி தாக்க முயற்றசித்ததுடன் வீடியோ கமரா மற்றும் தொலைபேசியை பலவந்தமான முறையில் பறித்து பல மணி நேரமாக தடுத்து வைத்துள்ளனர்.
சுமார் 45 நிமிடத்திற்கு மேல் பலர் சேர்ந்து ஊடகவியலாளருக்கு தகாத வார்த்தை பிரயோகித்துள்ளதுடன் செய்தி சேகரிப்பு தொடர்பில் ஒளிப்பகுதி செய்தி காட்சிகளை வெளியிடக்கூடாது என கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.