Breaking
Sun. Dec 10th, 2023

”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க திரைமறைவில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் செயல்படுகின்றன. இதில் பிரதானமாக இந்தியாவில் தளமாக கொண்ட ஒரு அமைப்பு இதன் பின்னணியில் உள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீனே இதற்கான முகவராக செயல்படுகிறார்.”

விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் மு காவின் பிரதித்தலைவருமான எச் எம் எம் ஹரீஸ் அவர்களின் புதிய கண்டு பிடிப்புத்தான் இது.

பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கொண்ட காழ்ப்புணர்வினாலும் அவரின் எழுச்சியை சகிக்க முடியாத மனப்புழுக்கத்தினாலும் இந்த அரை வேக்காட்டுத்தனமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஹரீஸ் அவர்களுக்கு ஒன்று கூற வேண்டும்!

நீங்கள் பிரதித்தலைவராக இருக்கும் உங்கள் கட்சி எங்கள் தலைவர் ரிசாட் அவர்களின் எழுச்சியினாலும் அவர் சமூகத்தின்பால் காட்டும் அக்கறையினாலும் படிப்படியாக அழிந்து வருகின்றது. உங்கள் கட்சியை அழிப்பதற்கு வெளிநாட்டுப்பணமோ முகவர்களோ தேவையில்லை. உங்கள் கட்சிக்காரர்கள் அதனை செவ்வனே செய்து வருகின்றனர் என்பதை நீங்கள் விரைவில் புரிந்து கொள்வீர்கள்.

“யா அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக நாம் உருவாக்கியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உதவி செய்யவில்லை என்றால் அந்தக்கட்சியை அழித்து விடு” என்று அக்கட்சியின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் இறைஞ்சிய துஆ உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ தெரியாது.

தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறையில் புடம் போடப்பட்டவன் என்று அடிக்கடி மேடைகளிலே பீற்றி வரும் நீங்கள் அந்த மாதலைவரின் இந்தப் பிரார்த்தனையை இன்னும் தெரியாமலிருக்க நியாயமில்லை. மர்ஹூம் அஷ்ரப்பின் துஆ பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொண்டானோ என்னவோ, சமூகத்திற்கு பயனில்லாத முஸ்லிம் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றது.

வெறுமனே சமூகத்திற்கான கட்சியென பேரளவில் இருந்து கொண்டு பதவிக்காகவும் பட்டத்துக்காகவும் சோரம் போகும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் உருப்படாது. இந்த யதார்த்தத்தை விளங்கியோ என்னவோ உங்கள் கட்சிக்காரர்கள் குறிப்பாக அம்பாறை மு கா முக்கியஸ்தர்கள் அமைச்சர் ரிசாட்டில் பெருமதிப்பு வைத்துள்ளனர். இந்த உண்மையும் உங்களுக்கு விரைவில் தெரியவரும்.

ஹரீஸ் அவர்களே,

முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு ரிசாட் துணை போகின்றார் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் கட்சிக்கு செய்த துரோகத்தனங்கள் என்னவென்பது உங்கள் மனச்சாட்சிக்கே தெரியும்.

2004ஆம் ஆண்டு நீங்கள் மு கா எம் பியாக இருந்த போது அந்த வேளை எதிர்நோக்கிய பொதுத்தேர்தல் ஒன்றில் நீங்கள் மேற்கொண்ட கபடத்தனத்தை சமூகம் இன்னும் மன்னிக்காது. தேர்தலில் உங்கள் வெற்றி கேள்விக்குறியாகி, அரசியல் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென நீங்கள் கருதியதனால் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஆகியோருடன் இணைந்து கட்சிக்கு சதி செய்தீர்கள்.

இரவோடிரவாக கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்திரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அக்கட்சிக்கும் நீங்கள் செய்த துரோகத்தனத்தை நாங்கள் என்னவென்று சொல்லுவது? அம்பாறை சந்துபொந்துகளிலெல்லாம் மரத்தை வெட்டிச்சாய்க்க வேண்டுமென ஓலமிட்ட நீங்கள் கட்சியை அழிப்பதற்கு பட்ட பாடுகளை மறந்து விட்டீர்களா?

நீங்கள் போட்டியிட்ட வெற்றிலைச்சின்னத்தை வெற்றி பெற செய்வதற்காக நீங்கள் கையாண்ட திருகுதாளங்களை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நீங்கள் ஒரு பச்சோந்தியென்பதை நாங்கள் புடம்போட்டுக்காட்ட முடியும்.

சந்திரிக்காவுக்கு தலைவர் ஹக்கீம் துரோகம் செய்ததனால் அரசிலிருந்து அவர் தூக்கியெறியப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். பின்னர் தலைவர் ஹக்கீம் ரணிலுடன் இணைந்து ஆட்சியில் பங்காளியாகி 2002/2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்த போது தலைவர் மீது கொண்ட குரோதத்தனத்தினால் அவரைப் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கியவர்களில் நீங்கள் முதன்மையானவர்.

வடக்கு கிழக்கு எம்பிக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி பதினொரு அம்சக்கோரிக்கைகளை தலைவர் ஹக்கீமிடம் கையளித்து ரணிலிடம் இந்தக் கோரிக்கைகளை வென்று தரவேண்டுமென்று ஹக்கீமுக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் நீங்களும் அடக்கம். நீங்கள் அவரை பழி வாங்குவதற்கு துடியாய்த் துடித்தீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக சமூகத்தை பலிக்கடாவாக்கினீர்கள்.

ஹக்கீம் அதிருப்தியாளர் குழு பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து ஹக்கீமுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியவர் நீங்கள் அல்லவா? முஸ்லிம் காங்கிரஸை ஆட்சியிலிருந்து ரணில் தூக்கியெறிய வேண்டும் என்பதிலும் கட்சி அழிய வேண்டும் என்பதிலும் நீங்கள் தானே வரிந்து கட்டிக் கொண்டு நின்றீர்கள்.  இந்தத் துரோகத்தனங்களையும் முன்னால் போக விட்டு பின்னால் காலிழுக்கும் உங்கள் நரி வேலைகளையும் மரக்கட்சிப் போராளிகள் இன்னுமே மறந்து விடவில்லை எனினும் நீங்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து நின்ற போதும் உங்கள் பருப்பு வேகாததால் ஹக்கீமிடம் மீண்டும் சரணடைந்தீர்கள். பதவிகளுக்காக அவரின் முதுகைச் சொறிந்தீர்கள்.

எனினும் உங்களுக்கு மகிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஹக்கீம் பெற்றுத்தர பின்னடித்த போது ‘தனியார் தொலைக்காட்சியில் மினுங்கல் நிகழ்ச்சியில் எத்தனை தடவை குந்தியிருந்து ஹக்கீமை விமர்சித்திருப்பீர்கள்? முஸ்லிம் காங்கிரஸின் போக்கு சமூகத்திற்கு ஆரோக்கியமற்றது என்று கூறி கட்சியை அழிப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை முஸ்லிம் சமூகம் எளிதில் மறந்துவிடவில்லை.

தனியார் தொலைக்காட்சியொன்றின் கூத்தாடியொருவருடன் இணைந்து நீங்கள் ஹக்கீமுக்கு கொடுத்த தலையிடிகள் கொஞ்சநஞ்சமல்ல. நட்ட நடு நிசியில் அலரிமாளிகைக்கு அந்த ஊடகக் கோமாளியுடன் சென்று நாட்டுத்தலைவரிடம் கட்சியைக்காட்டிக்கொடுத்த கரும வீரர் தானே நீங்கள். இது தானா உங்கள் கட்சிப் பற்று? இவ்வாறான நடு நிசிச்சந்திப்பொன்றிலே நீங்கள், தலைவர் ஹக்கீமைப்பற்றி அள்ளிவைத்த விடயம் வாக்குப்போக்காக மாட்டிக்கொண்டதால் சங்கடத்துக்குள்ளாகிய நீங்கள் ஊடகங்களுக்கு ’அரச தலைவரை சந்திப்பது குற்றமா?’ என்று மழுப்பல் அறிக்கை விட்டீர்கள். உங்கள் அறிக்கை எல்லோரையும் சந்தி சிரிக்க வைத்தது.

எனவே கண்ணாடி வீட்டிலே இருந்து கல்லெறியாதீர்கள் என்பதை பொறுப்புடன் கூறிவைக்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *