செய்திகள்பிரதான செய்திகள்

போருக்குப் பின்பு, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.  

ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் நபர்கள் எனப் பல்வேறு தரப்புக்களாலும் அச்சுறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. 

ஊடகங்களினதும், ஊடகவியலாளர் களினதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன்  சபையில் வலியுறுத்தினார்.  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05)  நடைபெற்ற  ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்   உரையாற்றியதாவது,

இந்த நாட்டில்  காலத்திற்கு காலம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை நசுக்கப்படுகின்ற அவல நிலையே தொடர்கின்றது.

அந்தவகையில் கடந்த போர்க்காலப்பகுதியில் பல ஊடகவியலாளர்களும்,  ஊடகப் பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்களும் ஊடகப்பணியாளர்களும் இந்த நாட்டில் தமக்கு இருந்த அச்சுறுத்தல் நிலைகளால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

குறிப்பாக தராகி சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், லசந்த விக்கிரமதுங்க போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை உதாரணமாகச் சொல்லமுடியும். 

அதேவேளை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் உதயன் பத்திரிகை நிறுவனம், சிரச ஊடக வலையமைப்பின் தெபானாம கலையகம் என்பன கடந்த காலங்களில் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி ஹோமாகம நகரில் பிரகீத் எக்னெலிகொட என்ற ஊடகவியலாளர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். 

வடக்குக் கிழக்கில் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் உறவுகளைப்போலவே அவரது குடும்பமும், கடந்த ஒன்றரைத் தசாப்தகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைவாகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதாக  தன்னை முன்னாள் கடற்படை வீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி.பிரசன்ன பியசாந்த என்பவர் அண்மையில்   யூடியூப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனை ஆராயுங்கள் இந் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு இதுதொடர்பில் அவரது குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்

அதேவேளை போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற,  அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

தற்போது ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் நபர்கள் எனப் பல்வேறு தரப்புக்களாலும் அச்சுறுத்தப்படும் நிலமைகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த 2024.12.26 வியாழக்கிழமையன்று கிளிநொச்சி ஊடக மையத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன் என்னும் ஊடகவியலாளரை, கிளிநொச்சி ஏ(9)வீதியில் வைத்து வாகனத்தில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். 

கடத்தல் முயற்சி கைகூடாமல் போகவே அவரைக் கடுமையாக தாக்கியதுடன் எச்சரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 இவ்வாறு தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதியைப்பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை அண்மையில் ஊழல் மோசடிதொடர்பில் செய்திவெளியிட்டமைக்காக கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஊழல்மோசடியுடன் தொடர்புடைய குழுவினால் அவருடைய வீட்டு நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டதுடன்,  மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஜனவரி மாதத்திலேயே கூடுதலாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டன. இந் நிலையில் ஆண்டு தோறும் ஜனவரி.31 ஆம் திகதியில் கறுப்பு ஜனவரி தினம் ஊடகவியலாளர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இம்முறையும் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஜனவரி என்பது ஊடகவியலாளர்கள் விடயத்தில் இன்னமும் கறுப்பாகவே உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கடத்தல்கள் இடம்பெறுவதாக பலரும் சுட்டிக்காடிய போது செய்தி  சேகரிக்கச் சென்ற கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகிய ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டனர். 

பிறிதொரு தடவை முல்லைத்தீவு ஊடக மையத்தில்  அத்துமீறி நுழைந்த இனந்தெரியாதவர்கள், ஊடக மையத்தின் செயற்பாடுகள்குறித்து கடுமையாக விசாரித்துள்ளனர். 

இத்தோடு முல்லைத்தீவு குருந்தூர் மலையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருந்தார். இப்படியாக பல சம்பவங்கள் உள்ளன. 

அனைத்தையும் சொல்வதற்கு நேரம் போதாது வவுனியா,மன்னாரிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர். 

தயவுசெய்து புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் வலிகளை உணர்ந்தவர்கள். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், அவர்களின் சுயாதீன தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்  என்றார்.

Related posts

கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!

wpengine

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Editor

13வருட காதலிக்கு கட்சியில் உயர் பதவி வழங்கிய கிம் ஜோங் வுன்

wpengine