பொதுபல சேனாவின் வலைக்குள் அகப்பட வேண்டாம்! வவுனியாவில் றிசாட்

பொதுபல சேனா மற்றும் இனவாத அமைப்புக்களின் வலையில் சிக்க வேண்டாம் என, வவுனியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இன அரசியல் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெளிஓயா மற்றும் வவுனியா வடக்கு சிங்களப் பிரதேச மக்களுடனான சந்திப்பு, இன்று (10/04/2016) காலை மதவாச்சியில் இடம்பெற்றபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, ஐதேக வவுனியா அமைப்பாளர் ஏ.க. கருணதாச, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நளின் ஆகியோரே, அங்கு குழுமியிருந்த சிங்கள சகோதரர்களிடம் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார்
வவுனியாவைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்கள் மேலும் தெரிவித்ததாவது,
பொதுபல சேனா இயக்கம், சிங்கள மக்களை தவறுதலாக வழிநடத்தப் பார்க்கின்றது. அமைச்சர் றிசாத் மீது தொடர்ந்தும் அபாண்டங்களைப் பரப்பி வருகின்றது. வடக்கில் குறிப்பாக, வவுனியாவில் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுடன் நாங்கள் இணைந்து வாழ்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் நாங்கள் கஷ்டப்படும்போது, சிங்கள மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் எனக் கூறிக்கொள்பவர்கள், எமக்கு உதவ முன் வரவில்லை. யுத்த காலத்தில் நாம் பட்ட துன்பங்கள் ஏராளம். அந்த வேளையிலே எமது வேதனைகளுக்குக் கை கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். அவர் இன, மத, பேதமின்றி பணியாற்றுகின்றார். எமது இன்ப,துன்பங்களில் பங்கேற்கிறார்.
இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் இருந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறிய மூன்று இலட்சம் தமிழ் மக்களை குடியேற்ற உதவியவர். அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தவர். உலகிலே எந்தப் போராட்டத்திலும் இவ்வளவு தொகையான அகதிகள் ஒரே இடத்தில் தஞ்சமடைந்தது கிடையாது. அப்படி இருந்தும், அதனை ஒரு சவாலாக ஏற்று, மக்களுடன் தங்கியிருந்து தனது பணிகளை மேற்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டது.