பொதுத்தேர்தல் உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல்

பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தேர்தல்கள் திணைக்களத்தின் இந்த விசேட வர்த்தமானி அரசியலமைப்பை கேள்விக்குட்படுத்துவதாக கூறி சட்டத்தரணி ச்சரித்த குணரத்ன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்ஜே அபேசேகர, பேராசிரியர் எஸ் ரட்னஜீவன் எச் ஹுல், ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சட்டமா அதிபர் ஆகியோரை இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


அரசியலமைப்பின் 70(5) ஏபிசி என்ற வகுதிகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குமாக திகதி அல்லது திகதிகள், நாடாளுமன்றக் கலைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.


எனவே, தேர்தல் திகதியை ஜூன் 2 ஆம்திகதிக்கு பின்னர் நிர்ணயிக்க முடியாது என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறு தேர்தலை ஜூன் 2ஆம் திகதிக்கு பின்னர் நடத்தவது அரசியலமைப்புக்கு முரணான விடயமாகும்.


அத்துடன் தேர்தலுக்கான திகதி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி தினத்தில் இருந்து ஐந்து முதல் 7 வாரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலை ஜூன் 13ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு சட்டரீதியாக கட்டுப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளமையாலும் தன்மைப்படுத்தல் நடவடிக்கைகள் 14 முதல் 21 நாட்களுக்கு இடம்பெறுவதாலும் இந்த காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலை நடத்த முடியாது என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.


எனவே தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஜூன் 20 தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அடிப்படை உரிமையை மீறுவதாக மனுதாரர் வாதத்தை முன்வைத்துள்ளார்.


இந்த நிலையில் மனுவின் தீர்ப்பு வழங்கப்படும் வரை உயர் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால தடையை விதிக்க வேண்டும் என்று மனுதாரரான சட்டத்தரணி ச்சரித்த குணரத்ன கோரியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares