பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறையை ஒழிப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (05) பெஸ்டியன் சாலை தனியார் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுஇ மகளிர் விவகார அமைச்சு இந்த ஆண்டு மகளிர் வாரத்தை அறிவித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலை ஒழிப்பதற்கான நாளாக மார்ச் 05ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகளில் அடையாளமாக ஒட்டப்பட்டன. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் குறித்து பொதுப் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அதற்கு எதிராகப் போராடவும் அவர்களைத் தூண்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள பேருந்துகளிலும் புகையிரதங்களிலும் இந்த சுவரொட்டிகள் நேற்று ஒட்டப்பட்டன என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,
1938 – பெண்கள் உதவிச் சேவை
109 – குழந்தைகள் மற்றும் பெண்கள் அவசர அழைப்பு
119 – காவல்துறை அவசர அழைப்பு
1955 – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
1958 – இலங்கை போக்குவரத்துச் சபை
1971 – இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம்
ஆகிய அவசர அழைப்பு எண்களுக்கு பயணிகள் புகார்களை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.