கட்டுரைகள்பிரதான செய்திகள்

புல்மோட்டை இப்தார்! காரணம் சொல்லும் சாய்ந்தமருது முகம்மத் இக்பால்

முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் மீதும் வீண்பழி சுமத்துவதன் மூலம், முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும் அதன் செல்வாக்கினை இல்லாது செய்யும் நோக்கில் இரவுபகலாக எந்நேரமும் தங்களது களுகுப்பார்வையினை செலுத்திக்கொண்டிருக்கும் அதன் எதிரிகளுக்கு புல்மோட்டை இப்தார் சம்பவம் ஒரு சிறந்த அரசியல் களமாக அமைந்துள்ளது.

புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கப்பட்டால் விளையாட்டு கழகம் தொடக்கம் அரசியல்கட்சிகள் வரைக்கும் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவது வழமையான விடயமாகும். முஸ்லிம் அல்லாத அரசியல் தலைவர்களும் முஸ்லிம்களை அழைத்து இப்தார் நிகழ்வுகளினை நடாத்துவார்கள்.

அதில் இப்தார் நிகழ்வுக்காக அழைப்பு விடுக்கும்போது நோன்பாளிகள் யார் நோன்பாளி அல்லாதவர்கள் யார் என்று பிரித்து பார்ப்பதில்லை. அத்துடன் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அல்லாதவர்களையும், அரசியல் கட்சி பாராது முஸ்லிம் என்றவகையில் அனைத்து கட்சிக்காரர்களையும் அழைப்பதும் ஒரு சம்பிரதாயமாகும். அரசியல் மயமாகிவிட்ட இவ்வாறான இப்தார் நிகழ்வுகளை அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது.

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடும்போது மட்டும் எல்லோரும் சமம் என்ற ரீதியில் அனைவரும் சரிசமமாக தோளோடு தோல் நின்று தொழுவார்கள். ஆனால் இந்த சமத்துவம் பள்ளிவாசலுக்கு வெளியே வேறு எந்த இடங்களிலும் காணமுடியாது. ஒரு நிகழ்ச்சி நடாத்துவதென்றால் அதில் அதீதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் என்று பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

அதுபோலவே புல்மோட்டை அரபா வித்தியாலயத்தில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்விலும் அதீதிகளுக்கென்று பிரத்தியேகமான இடமும், சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு வேறு இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதீதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் என்று ஒதுக்கப்பட்ட முன்வரிசை இடத்தில் சிறுவர்கள் அமர்வதற்கு முன்பு அவர்களை உரிய இடத்தில் அமரச்செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏற்பாட்டாளர்களின் தவறாகும். ஆனால் அமர்ந்ததன்பின்பு எழும்பச்செய்வது நாகரீகமானதல்ல. மாறாக அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாக அமைந்துவிடும்.

இருந்தாலும் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வருகைதர இருந்த சில நொடிகளுக்கு முன்பு அதீதிகளின் முன்வரிசை இடத்தில் அமர்ந்திருந்த சிறுவர்களை எழும்பி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருமாறு மிகவும் பணிவானமுறையில் வேண்டப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் ஏற்பாட்டாளர்களின் அந்த வேண்டுகோளை சிறுவர்கள் செவிமடுக்கவுமில்லை, எழுந்து தங்களுக்குரிய இடங்களுக்கு செல்லவுமில்லை.

நேரம் அன்மித்துள்ளதனாலும், அதீதிகளை வேறு இடத்தில் அமரச்செய்வதற்கு ஏற்பாடு செய்ய நேரம் போதாமயினாலும் வேறு வழியின்றி அந்த ஒருசில நொடிகளுக்குள் பலாத்காரமான முறையில் சிறுவர்களை வெளியேற்றும் பொருட்டு அந்த ஏற்பாட்டாளர்களுடன் இருந்த ஒருவர் விரட்டி இருக்கின்றார்.

இவ்வாறு சிறுவர்களை பலாத்காரமாக வெளியேற்ற முற்பட்டவர் ஏற்பாட்டு குழுவில் உள்ளவரா அல்லது மாற்று கட்சிக்காரர் ஒருவர் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் மீதும், அதன் தலைவர் மீதும் வீண் பழி சுமத்தும்போருட்டு இவ்வாறு நடந்துகொண்டாரா என்பதுதான் இன்றைய கேள்வியாக இருந்துகொண்டிருக்கின்றது.

இந்த சில நொடிப்பொழுதில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்தவர்கள் உண்மை என்ன என்பதனை மறைத்து திரும்ப திரும்ப ஒளிபரப்பும் வகையில் எடிட் பண்ணி முகநூல்கள் மூலமாக பதிவேற்றம் செய்துள்ளார்கள். இது முஸ்லிம் காங்கிரஸ் எதிரிகளின் அரசியல் வங்குரோத்து தன்மையினை காட்டுகின்றது.

யாரோ செய்த இந்த தவறுக்காக, அரசியல் நோக்கம் கருதி புனித ரமழான் மாதத்தில் தலைவர் ஹக்கீம் மீது அபாண்டமான முறையில் வீன்பழி சுமத்தும் எமது சகோதரர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இதனை தலைவர் ஹக்கீமோ, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கோ, மாகாணசபை உறுப்பினர் அன்வரோ அல்லது வேறு எந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களோ செய்யவில்லை. மாறாக எடுபுடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவர்தான் இவ்வாறு நடந்துகொண்டார். அந்த ஒரு எடுபுடி யார் என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ளாமல் எடுத்த எடுப்பில் தலைவர் மீது குற்றம் சுமத்தும்போது சில சந்தேகங்கள் எழுகின்றது. அதாவது குற்றம் சுமத்துபவர்கள்தான் வேண்டுமென்று திட்டமிட்டு இவ்வாறு தங்களது எடுபுடியை அனுப்பி அந்த சிறுவர்களை விரட்டி உள்ளார்களா என்பதுதான் அந்த சந்தேகமாகும்.

அதுமட்டுமல்லாது விரட்டும்போது துல்லியமாக ஒளிப்பதிவு செய்து ஊடகங்கள் மூலமாக முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஆனால் குறித்த இப்தார் நிகழ்வில் எந்த ஒரு சிறுவர்களும் நோன்பு திறக்காமல் வீடுகளுக்கு செல்லவில்லை. அனைத்து சிறுவர்களும் நன்கு உபசரிக்கப்பட்டர்கள். உண்மையை மறைத்து தங்களது சுயநல அரசியல் நோக்கம் கருதி இவ்வாறு வீண் பழி சுமத்துபவர்கள் மறுமையை பயந்துகொள்ள வேண்டும்.

 

Related posts

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொட்டைத்தலை

wpengine

இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஜெனிவாவில் முறைப்பாடு

wpengine

Fight Cancer – Awareness program at BMICH

wpengine