பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியன. பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாத்துக் கொண்டு முறையற்ற வகையில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்பு பிரேரணையை கொண்டு வர நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
பொலிஸ் திணைக்களம் தமது பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாமல் தள்ளாடுகிறது. இது ஆச்சரியத்துக்குரிய வெட்ககேடானதொரு செயலாகும்.தன்னை கைது செய்வதை தடுக்க கோரி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்துக்கு ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார். பொதுவாக ரிட் மனுத்தாக்கல் செய்யும் போது குறித்த ஆவணத்தில் சட்டத்தரணி முன்னிலையில் சத்திய கூற்றினை முன்வைக்க வேண்டும். ஆகவே அந்த சட்டத்தரணியை விசாரித்தால் தேசபந்துவை கண்டுப்பிடிக்கலாம். குற்றப்புலனாய்வு திணைக்களம் என்ன செய்கிறது என்பதை அறியவில்லை.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்லாமிய நூல்கள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கடந்த மாதம் 08 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பியிருந்தேன். உரிய தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கமைவாக ஒருசில இஸ்லாமிய நூல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை திங்கட்கிழமை (10) நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற இராமநாதன் அச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு எதனையும் பேச முடியாது. பேசும் வார்த்தையில் இனிமை இருக்க வேண்டும், வாய்மை மற்றும் சொல்வான்மை இருத்தல் வேண்டும்.
வாய்மை தொடர்பில் திருவள்ளுவர் ‘ வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிறருக்கு சொல்லால் கூட தீங்கிழைக்க கூடாது என்று இந்த குறளுக்கு பொழிப்புரைக்கப்படுகிறது.
அதேபோல் வள்ளுவர் ‘ ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கமே அனைத்துக்கும் மேன்மை தருவதால் அந்த ஒழுக்கம் உயிரிலும் மேலானதாக மதிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களை ‘ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்’என்று அழைப்பார்கள். ஆகவே அனைவரும் இந்த மரியாதைக்கு அமைவாக நடந்துக் கொள்ள வேண்டும்.
பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற அச்சுனா பிற சமூகத்தை புண்படுத்தும் வகையில் பேசுகிறார். இது கவலைக்குரியது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு எதனையும் பேச முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நாங்கள் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை கொண்டு வர நேரிடும் என்றார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg