பிரதான செய்திகள்

பழமைவாய்ந்த இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்று பிற சமூகங்களால் சந்தேகிக்கப்படும் நிலைமை

ஊடகப்பிரிவு-

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மினுவாங்கொடையில், நேற்று (20) நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்று, இன்று பிற சமூகங்களால் சந்தேகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏதோ ஒரு சில விஷமிகள் செய்த இந்த இழிசெயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பழிதீர்க்கப்படும் ஆபத்தையே நாம் இன்று எதிர்கொள்கின்றோம். இந்த அபாயத்தை இல்லாமல் செய்வதும், உண்மைத் தன்மையை வௌிப்படுத்தி எழுதுவதும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் சமூகப் பொறுப்பாகும்.

கட்சிக்காக அல்லது ஒரு தலைமைக்காக எழுதும் மன நிலைகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தது. இந்த மனநிலைகளைக் கை விட்டு, சமூகத்துக்காக எழுதும் வரலாற்றுப் பணிக்குள் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வரவேண்டியுள்ளது. இதற்கு நிலாம் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் வழிகாட்ட வேண்டும். எமது மார்க்கத்திலும், ஹதீஸிலும் கை வைக்குமளவுக்கு அல்லது அவற்றைக் கொச்சைப்படுத்துமளவுக்கு, நிலைமைகள் நாளுக்கு நாள் மோசடைந்து வருகின்றன. இவற்றைத் தௌிவுபடுத்தி எழுதும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. சிங்கள, கிறிஸ்தவ மற்றும் இந்து சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி பரப்பப்படும் போலிப் பிரச்சாரங்களுக்கான பதிலடி, எமது எழுத்தாளர்களிடமே உள்ளன.

நண்பர் நிலாமின் நட்புக்கு கிடைத்த பெறுமானம்தான் எல்லோரும் அவரை “நிலாம் நானா” என்று அன்புடன் அழைப்பதாகும். எனது ஊடகப் பொறுப்பாளர்களாகவிருந்த சுஐப். எம். காஸிம் மற்றும் இர்ஷாத் ரஹ்மதுல்லா ஆகியோரின் குடும்ப உறவுடனும் நிலாமுக்குத் தொடர்புள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஊரே திரண்டு நிலாமுக்கு விழா எடுப்பது அவரது நேர்மைக்கான சாட்சியங்கள்தான். இதனால் நானும் பெரும் மகிழ்வுறுகிறேன். கலைஞர்கள், உலமாக்கள், ஊர்மக்கள், அரசியல்வாதிகள் எனப் பலரையும் இன்றைய விழா ஒன்றுபடுத்தி உள்ளது’ என்று கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

Related posts

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

Maash

பிரதேச செயலாளருக்கு எதிராக இணையதள செய்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

மறைந்து போன கரையோர மாவட்டம்

wpengine