“நாட்டை பிரிக்க இடமளிக்கமாட்டேன்” ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கிறார் ஹிஸ்புல்லாஹ்

“நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தவோ அல்லது நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை தாம் வரவேற்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
“வடக்கு – கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு வடமாகாண சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு  , இன ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் என நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் தனது நிலைப்பாட்டினை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
இனப் பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு – கிழக்கு மீள் இணைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான சுயாற்சி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.
இந்நிலைப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஆகவே, நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பு மூலம் மாத்திரமே தீர்வு காணப்பட முடியும் என்பது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையாது. மாறாக இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்துவதாக அது அமையும்”; – என எச்சரிக்கை விடுத்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares