நாட்டிலிருந்து கடந்த காலங்களில் வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள், மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 2018 கார்டருக்கு இணங்க 2800 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 2000 அளவிலான விசேட வைத்திய நிபுணர்களே இங்கு உள்ளார்கள்.
பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். அரசியல் காரணிகள் உள்ளிட்ட பல காரணிகளால்தான் அவர்கள் இவ்வாறு வெளியேறினார்கள். நாம் இந்தக் குறைகளை படிப்படியாக நிவர்த்தி செய்து வருகிறோம். இதுதொடர்பான விசேட வைத்திய நிபுணர்களுடனும் வைத்திய சங்கங்களுடனும் நாம் தொடர்ந்தும் பேச்சுவார்ததை நடத்திக் கொண்டுதான் உள்ளோம்.
அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொடுத்து அவர்களின் சேவையை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நாம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எனவே, நாட்டிலிருந்து வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.
ஓரிரு வருடங்களில் விசேட வைத்தியர் ஒருவரை எம்மால் உருவாக்க முடியாது. இதனால்தான் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான குறைகளும் காணப்படுகின்றன. வரவு- செலவுத் திட்டத்தில் இவர்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.