தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன்

எங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எதிர்க்கட்சியினரை கைது செய்து அவர்கள் தொடர்பில் பிழையான செயற்பாடுகள் பின்பற்றப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் எங்கள் அரசாங்கத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு காரணத்திற்காகவும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு இடமளிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று நாங்கள் தொழில் பிரச்சினை குறித்து பேசுகின்றோம். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்றால், இந்த பகுதிகளின் இலங்கை இளைஞர் யுவதிகள் பாரிய அளவிலானோர் தொழில் செய்யும் முறையை அவதானிக்கலாம். எங்கள் இளைஞர் யுவதிகள் கொரியாவில் நிறைந்திருக்கின்றார்கள்.

ஜப்பானுக்கு சென்றாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றாலும் இலங்கை இளைஞர் யுவதிகள் அந்த நாடுகளில் தொழில் செய்யும் விதத்தை பார்க்க கிடைக்கின்றது. எங்கள் நாட்டிலேயே தொழில் உருவாக்கம் செய்வதென்றால் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் அத்தியாவசியமாகும்.

அப்படி இன்றி முதலீட்டாளர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதில்லை. அதிவேக நெடுஞ்சாலை, விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றை அதற்காகவே நாங்கள் அமைத்தோம். தற்போது தொழில்துறை நகரம் அமைக்கின்றோம். இதுவரையில் மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்றை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கு முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு அவசியமான இறப்பர் நூற்றுக்கு முப்பத்தைந்து வீதம் இலங்கையிலேயே பெறப்படுகின்றது.

தற்போது இலங்கையில் இறப்பருக்கு சிறந்த விலை இல்லாமையினால் மீண்டும் இறப்பர் தொழிற்சாலையை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நாங்கள் அதற்காக வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

தொழில் உருவாக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்வது எங்கள் பொறுப்பாகும். சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை உடனடியாக கைவிட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியமாகும். நான் அதற்காக ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். சூழலை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

வடக்கு – கிழக்கு பிரதேசம் உட்பட இலங்கைக்கு இதுவரையில் நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதே எங்கள் அடுத்த இலக்காகும். வடக்கு – கிழக்கு, மேற்கு மலையகம் என அனைதது மாகாணத்திலும் வலுவாக அபிவிருத்தி செய்ய வேண்டும்.

ஒரு மாகாணத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. வடக்கு – கிழக்கு மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக கங்கைகளில் 20 ஏக்கள் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆரம்பிக்கப்படும் சுத்தமான குடிநீர் திட்டத்தின் மூலம் கங்கைகளை மழை நீரில் நிறைத்து சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். வாக்களித்தாலும் இல்லை என்றாலும் மாகாணங்களுக்கு வெறுப்பு காட்ட முடியாது. அனைத்து மாகாணங்களுக்கும் எங்களால் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் நிறைவேற்றப்படும்.

எங்கள் இளம் தலைமுறையினர் மிகவும் புத்தசாலிகளாகும். அவர்கள் வேறு கோணத்தில் சமூகத்தை பார்க்கின்றார்கள். போதை வஸ்து முழு நாட்டிலும் பரவியுள்ளது. பாடசாலை மாணவர்களை இதற்காக ஈடுபடுத்துவது என்பது ஒரு சோகமான விடயமாகும். பெற்றோர் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களின் சகோதரர்கள், தங்களின் பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். போதை வஸ்துவை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு நாங்கள் கடுமையாக செயற்ட எதிர்பார்த்துள்ளோம். இதுவரையில் வலது கையில் பிடித்த போதை பொருளை இடது கையில் விற்பனை செய்தவர்கள் தொடர்பில் விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அது தொடர்பில் மேலதிக தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள என நினைக்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து துறைகள் தொடர்பிலும் சிறந்த வழிப்புணர்வுடன் இருக்கும் ஒருவராகும். இதனால் போதை பொருள் தொடர்பிலான விசாரணைகளும் மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்வது தெளிவாகியுள்ளது. எந்த ஒரு தெளிவான ஆதாரங்கள் இன்றி அரச ஊழியர்களை கைது செய்ய வேண்டாம் என நான் கூறியுள்ளேன். எங்களுக்கு செய்த வேலையை மற்றவர்களுக்கு செய்ய முடியாது. எந்த ஒரு தெளிவான சாட்சியுமின்றி உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைது செய்த முறை, சட்டம் தவறாக செயற்பட்ட முறையை நாங்கள் பார்த்தோம். அதேபோன்ற ஒன்று மீண்டும் இடம்பெறாது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு நாங்கள் எதிர்ப்பு வெளியிட்டோம். இது உங்கள் பிள்ளைகளின் சொத்து. குத்தகைக்கு வழங்குவது வேறு விடயம். பத்து பதினைந்து வருடங்கள் என்றாலும் பரவாயில்லை. எனினும் 99 வருடங்களுக்கு துறைமுகத்தை விற்பனை செய்வதென்றால் அனுமதிக்க முடியாது. துறைமுக நகரத்திற்கு அவ்வாறே செய்யப்பட்டுள்ளது. இருநூறு வருடங்கள் செல்லும் வரை எங்களுக்கு துறைமுகத்தால் இலாபம் இல்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்த பணம் எங்கு சென்றதென தெரியவில்லை. நாங்கள் அது குறித்து தேடுகின்றோம். வைத்திய பல்கலைக்கழகங்களுக்கு அதிகபட்ச மாணவர்களை அனுமதிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஜனாதிபதியின் செயற்பாட்டு வேலைத்திட்டங்கள் காரணமாக அமைச்சர்கள் இன்று முன்னரை விடவும் நன்றாக தீர்மானம் எடுத்து வேலை செய்வதற்கு பழகியுள்ளனர். அனைத்து அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த அவதானத்துடனும் தெளிவாகவும் உள்ளார் என்பதனை பார்க்க முடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய அளவிலானோர் இதுவரையிலும் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களை எங்களால் நிராகரிக்க முடியாது. தேர்தலில் அனைத்து வாக்குகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களை ஒதுக்குவதற்கு பதிலாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இம்முறை பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இணைந்திருந்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares