கட்டுரைகள்பிரதான செய்திகள்

திரவியம் தேடும் திராவிடர்களின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள்..!


சுஐப் எம்.காசிம்

மனிதனின் வாழ்வாதாரப் பிரச்சினை, கடல்வாழ் உயிரினங்களையும் விட்டபாடில்லை. ஒருசாண் வயிற்றுக்கான போராட்டம், இன்று பலகோடி ஜீவன்களை பலியெடுக்கும் நிலைமைக்கு மாறிவருவதுதான் கவலை. இன்றைய தேவைக்காக என மனிதன் வாழ்ந்தால், இயற்கை இவ்வளவு சீரழிக்கப்படாது. இயற்கை விரும்பிகளும் இதைத்தான் விரும்புகின்றனர். அளவுக்கு அதிகமான நுகர்வு, மனிதனின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தாவது பற்றி எவர் கருத்தில்கொள்கின்றனர்? தமிழக மற்றும் வடபகுதி மீனவர் பிரச்சினையும் இப்படித்தானுள்ளது.

தொப்புள்கொடி உறவென்றும், இணைபிரியா உணர்வு என்றும் ஒன்றுபட்டுள்ள இவர்களின் பிரச்சினை, “தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதையே உணர்த்துகிறது. தலைமன்னார், தனுஷ்கோடி இன்னும் ராமேஸ்வரம், நந்திக்கடல் இவையெல்லாம் திராவிடர்கள் திரவியங்கள் தேடும் கடற்பிரதேசங்களாகும். இந்தத் தேடல்கள் முறையாக இல்லாததால் வந்த முரண்பாடுகள், பல்லாண்டு காலங்களாக பரஸ்பரத்தை இல்லாது செய்துள்ளன.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நகரம் தனுஷ்கோடி. இலங்கையின் இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலிருந்த இந்நகரம் கடல்வாணிபத்துக்கு மிகப்பொருத்தமானது. ஒரு காலத்தில் ஏற்பட்ட புயல் இந்த நகரத்தை அழித்தாலும் கடலோடிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும் இது பிடித்தமான பகுதியாகவே இன்றளவும் இருக்கிறது. நமது திராவிட தமிழர்கள் மோதிக்கொள்ளவும், மோப்பம் பிடிக்கவும் இப்பகுதி பயன்படுகிறது. இதனால், சர்வதேசத்தின் கவனமும் இப்பகுதியை விட்டு அகலாதுள்ளது. தமிழக மற்றும் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளாக பார்க்கப்பட்டாலும், ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளின் பிரச்சினை என்பதே பொருத்தமானது.

ஏன், இந்த மோதல்கள்? இழுவைப் படகுகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால் வடபகுதி மீனவர்களுக்கு என்ன பிரச்சினை? அவரவர் எல்லைகளில் எவர் எதைப் பயன்படுத்தினாலும் பிரச்சினைகள் எழாதுதானே! இப்படி கருதவும் இயலாது. காரணம், இலங்கையில் இழுவைப் படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுதான். வட பகுதிக் கடலில் மட்டுமல்ல, நாட்டின் எந்தக் கடல் பகுதிகளிலும் இழுவைப் படகுகளை பயன்படுத்த அனுமதியில்லை இலங்கையருக்கு. இதனால், நாட்டுப்படகில் (one day boat) ஒருநாள் முழுவதும் கடலில் அலைந்து, கிடைப்பதை கொண்டு விற்றுத்தான் நமது மீனவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். நாள் முழுதும் அலைந்தாலும் நம்மவர் நிலை நல்லதாக இருக்காது. இப்படியிருக்கையில், தமிழக மீனவர்கள் விரைந்து வந்து நுழைந்து, வடபகுதி கடல் வளங்களை அள்ளிச் செல்வதை அனுமதிக்க முடியுமா? என்பதுதான் இதிலிருக்கும் நியாயம். எப்படி இவர்கள் இதை கையாள்கின்றனர். பெரிய மீன்களை அள்ளிச் சென்று விற்பனை செய்கிறார்கள். “ஏதோ நமது உறவுகள் பிழைத்துப் போகட்டும்” என மனிதாபிமானத்தில் சிந்திப்போர், இதில் சண்டைக்கு போகும் அவசியம் எழாது.

ஆனால், இந்த இழுவைப் படகுகள் கணப்பொழுதில் செய்யும் அட்டூழியங்கள் இருக்கிறதே! அது சொல்லுந்தரத்தில் இல்லை. மீன் குஞ்சுகள், வளரும் பருவத்து மீன்கள், இனப்பெருக்கச் சினைகள், மடிகள் எல்லாம் ஒரே கணத்தில் அள்ளப்படுகின்றன. இவற்றை விற்கவும் முடியாது, வளர்க்கவும் இயலாது என்பது தமிழக மீனவர்களுக்கு தெரியாததா? அப்படியிருந்தும் அனைத்தையும் அவ்விடத்திலே நிலத்தில், சதுப்பில் கொட்டிவிடுகின்றனர். உயிருக்காக துடிக்கும் இந்த அப்பாவி உயிரினங்களை கடலில் எறிந்தால், பின்னொரு காலத்தில் அது வளர்ந்து பிரயோசனப்படும் என்ற சிந்தனையும் இவர்களிடம் இல்லை. வாழ்வதற்கென கருக்கொண்டுள்ள மீனின் சினைகள், முட்டைகளை பாதுகாத்து, மீனின் இனப்பெருக்கத்துக்கு வழிவிடும் தர்மமும் இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. இதுதான் கவலை. இந்த இழுவைப் படகுகளால் கடற்பாறைகள், முருகைக்கற்கள் எல்லாம் அள்ளப்பட்டு அழிகின்றன. இதைத்தான் கடல் வளம் அழிவதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி தொடர்ந்து நடந்தால், மானிடன் மீனையே உண்ண முடியாதளவு பஞ்சம் ஏற்படுவதைப் பற்றி மீனவர்கள் எவரும் கருத்தில் கொள்வதாகவும் தெரியவில்லை. இதற்காகவே, நமது அரசாங்கம் இந்த இழுவைப் படகுகளை தடை செய்துள்ளது. சொந்தநாட்டு மீனவர்கள் அனுபவிக்காத கடற்சொத்துக்களை தமிழக உறவுகள் அள்ளிச் செல்வதை உறவு, உணர்வின் சிந்தனையில் விட்டுக்கொடுக்க ஒன்றும் இது உரிமைப் பிரச்சினை இல்லையே! இது உணவுப் பிரச்சினை, வயிற்றுப் பிழைப்பு. இதனால்தான், இது போரிலும் சாவிலும் முடிகிறது. அசாதாரண காலத்திலும் கடல்வளத்தை வட பகுதியினர் அனுபவிக்கவில்லை. பாதுகாப்பு, கெடுபிடி, படையினரின் ரோந்து என இதில் பல சிக்கல்கள் நிலவின. சாதாரண நிலை திரும்பி சமாதானம் மலர்ந்துள்ள காலத்திலாவது இந்த வளத்தை இவர்கள் அனுபவிக்க வேண்டுமே!

Related posts

ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் தலையீட்டினாலும் அமீர் அலியின் முயற்சியாலும் காணாமல் போன 6 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

wpengine

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்

wpengine

தரங்க, டிக்வெல்ல அதிரடி : ஆஸியை வீழ்த்தியது இலங்கை

wpengine