தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் இருக்குமாயின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்த மக்களின் ஆசிர்வாதத்துடன் வெற்றிப்பெற்று தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அவரது இல்லத்திலே இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,


தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த வருடம் நவம்பர் மாதக்காலப்பகுதியில் இந்நாட்டு மக்கள் மீது அதிகமான அக்கறை இருந்தது. இந்த அக்கறை கடந்துள்ள இந்த ஏழு மாதகாலத்தில் இருப்பதாக தெரியவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அரசாங்கம் அவர்களுக்காக எந்தவித சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதாக தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு தற்போது நாட்டு மக்களை விட கடற்கரையோர வேலைத்திட்டங்கள், புதிய பாதைகள் அமைத்தல், நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம், கிரிக்கட் அரங்குகள் போன்றனவே முக்கியமான விடயங்களாக இருக்கின்றன.

தங்களுக்கு காசு கிடைக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பிலே ஆளும் தரப்பினர் ஆர்வமாக இருக்கின்றனர்.
இன்று நாட்டு மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கான வறுமானம் இன்றி, உணவு தட்டுபாட்டுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த திரிபோசா தயாரிப்பு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

திரிபோசாவை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் இல்லை என்று திரிபோசா உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் வெறுப்புற்று இருக்கின்றனர்.


தொடர்ந்தும் தங்களது பைகளை நிரப்பிக் கொள்வது தொடர்பிலே சிந்தித்துக் கொண்டிருக்காமல் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டு மக்களின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலை நாங்கள் வெற்றிக்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைப்போம்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares