தயாசிறி ஜயசேகர முற்றிலும் பொய் சொல்லுகின்றார்! மூன்று ஆண்டுகளாக எனக்கு அழைப்பில்லை

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69வது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.


கடந்த காலங்களில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று ஆண்டு நிறைவு மாநாடுகளுக்கு எனக்கு எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.


கட்சியின் உறுப்பனர்களை ஏமாற்றும் நோக்கில் இவர்கள் புனையும் பொய்கள் குறித்து அறிவுடன் ஆராய்ந்து பார்ப்பது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் கடமை.
கட்சியின் மாநாடுகளுக்கு மாத்திரமல்ல, மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு பல வருடங்களாக எனக்கு அழைப்புகள் கிடைக்கவில்லை.

அப்படி அழைப்பு கிடைத்திருந்தால், எனது அன்புக்குரிய தந்தை உருவாக்கிய, தாய் பாதுகாத்த, நான் பிறந்து வளர்ந்த, நான் நாட்டுக்கு சேவையாற்ற வழியை ஏற்படுத்திக்கொடுத்த கட்சிக்காக நான் அவற்றில் கலந்துக்கொள்ளாமல் இருந்திருப்பேன் என நினைக்கின்றீர்களா?. அப்படியான அழைப்புகள் கிடைத்திருந்தால், அவற்றை ஏகமானதாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

எதிர்காலத்திலும் அப்படியே.
கட்சியின் தலைவர் செயலாளர் ஆகியோர் கட்சி ஏற்பாடு செய்யும் எந்த கூட்டங்களுக்கோ, வைபவங்களுக்கோ என்னை அழைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலக ஊழியர்களுக்கு கூட உத்தரவிட்டுள்ளனர்.

இவை அனைத்தையும் நான் அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
கட்சியை அழிப்பவர்களிடம் இருந்து அதனை காப்பாற்றும் நேரம் வந்துள்ளது என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares