பிரதான செய்திகள்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கோட்டாவை நிராகரித்திருந்தார்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச அணியினரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

இந்தநிலையில், அவர்களின் மனதை மஹிந்த ராஜபக்ச எப்படி வெல்லப்போகின்றார்? அவரின் அம்பாந்தோட்டைப் பேச்சு விசித்திரமாக இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அவிசாவளையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூடடத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.


அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போது, ‘தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களைப் புறக்கணிக்கவில்லை.


வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு அவிசாவளையில் நேற்றுமுன்தினம் மாலை பதிலளித்து உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கவில்லை. பலர் அவரை நிராகரித்திருந்தார்கள். அதுபோல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கோட்டாபய ராஜபக்சவை நிராகரித்திருந்தார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச அணியினரைத் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் மனதில் ராஜபக்சக்கள் பெரும் குற்றவாளிகள். அவ்வளவுக்கு அவர்கள் ராஜபக்சக்களினால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.


இந்தநிலையில், அவர்களின் மனதை மஹிந்த ராஜபக்ச எப்படி வெல்லப்போகின்றார்? அவரின் அம்பாந்தோட்டைப் பேச்சு விசித்திரமாக இருக்கின்றது. ராஜபக்சக்களினால் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ராஜபக்ச ஆட்சியில் பல தடவைகள் முஸ்லிம்களைக் குறிவைத்து கலவரங்கள், வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. இதை முஸ்லிம் மக்கள் மறக்கவேமாட்டார்கள்.
அதேபோல் சிங்கள மக்களும் ராஜபக்சக்களினால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டார்கள். நீதி வேண்டி ஆர்ப்பாட்டங்கள் நடத்திய சிங்கள மக்கள் தாக்கப்பட்டார்கள்; சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.


ராஜபக்ச அரசின் அராஜகங்களினால் மூவின மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இப்படிப்பட்ட இந்த அரசை பொதுத்தேர்தலில் நாம் தோற்கடிக்க வேண்டும். மூவின மக்களும் ஒரே குடையின் கீழ் நின்று இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நல்லாட்சியில் இதை நாம் நிரூபித்துக் காட்டினோம். எனவே, மீண்டும் ஒரு தடவை எங்களுக்குச் சந்தர்ப்பம் தாருங்கள்.


எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்று வாக்குக் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்களின் ‘டீல்’ அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டெங்கு ஒழிப்பு ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – அரசாங்கத்துக்கு சவால் விட்ட சஜித்!

Editor

தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

வித்தியா கொலை! 7பேருக்கு மரண தண்டனை

wpengine