தமிழர்களின் உடன்பாடின்றி முஸ்லிம்களால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா?

(முகம்மத் இக்பால்)

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்றது. முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகளினதும், சிவில் சமூகத்தினர்களினதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய தீர்மானங்களை எடுக்ககூடியவருமான சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

முஸ்லிம் சமூகத்தில் சிலர் இருக்கின்றார்கள் முஸ்லிம் காங்கிரஸ் எது செய்தாலும் அதனை விமர்சிப்பதே அவர்களின் பொழுதுபோக்காகும். அந்தவகையில் முஸ்லிம் காங்கிரசின் செயலமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டது சிலருக்கு ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. டயஸ்போராக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அடிமைப்பட்டுள்ளதாக தங்களது காழ்ப்புணர்ச்சியான சிந்தனைக்கு எட்டியவகையில் அந்த மேதாவிகள் விமர்சனம் செய்தார்கள்.

எடுத்த எடுப்பிலே நேரடியாக விமர்சிக்க மட்டும் தெரிந்த இவர்களால், முஸ்லிம் சமூகத்துக்கான ஏற்றுக்கொள்ள கூடிய எந்தவித தீர்வையோ, கருத்துக்களையோ முன்வைக்க தெரியவில்லை. அத்துடன் இத்தீர்வு முயற்சியில் எமது சமூகத்திலுள்ள துறைசார்ந்தவர்களின் கருத்துக்களை உள்வாங்கும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற முயற்சிகளை பாராட்டுவதற்கும் இவ்வாறானவர்களின் மனதில் இடமுமில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை எம்மவர்கள் மட்டும் விமர்சிக்கவில்லை. மாறாக முஸ்லிம் காங்கிரசின் செயலமர்வில் கலந்துகொண்டதற்காக அவரது சமூகத்தை சேர்ந்த சில புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருசில கடும் போக்குவாதிகளும் கடுமையாக விமர்சனம் செய்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் குழப்புவதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் இல்லாதிருந்திருந்தால் தமிழர்கள் எப்பவோ அவர்களுக்குரிய அரசியல் உரிமையினை அடைந்திருப்பார்கள் என்றும், தமிழர்கள் ஆயுத போராட்டம் நடாத்தியபோது ஒருசில துன்பியல் நிகழ்வுகளை கூறிக்கூறி தங்களது போராட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கொச்சைப்படுத்தியதாகவும், தமிழர்கள் அழிந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் வாய்மூடி மௌனியாக இருந்ததாகவும், இப்படிப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் அரசியல் செயலமர்வில் சுமந்திரனுக்கு அங்கு என்ன வேலை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தது.

சுதந்திரத்துக்கு பிற்பட்ட தமிழர்களின் அரசியல் மற்றும் ஆயுத போராட்ட வரலாற்றில் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இந்திய – இலங்கை ஒப்பந்தம், ரணில் – பிரபா ஒப்பந்தம் என சிறுபான்மை தமிழர்களுடன் பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்கள் செய்துகொண்ட பிரபலமான வரலாற்று முக்கியத்துவமிக்க எந்தவித ஒப்பந்தங்களிலும் முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அதுபோல் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க போன்றோர்கள் விடுதலை புலிகளுடன் கட்டம் கட்டமாக முறையே 1990 ஆம் ஆண்டிலும், 1994 ஆம் ஆண்டிலும் நடாத்திய எந்தவித சமாதான பேச்சுவார்த்தைகளிலும், ஒப்பந்தங்களிலும்  முஸ்லிம் சமூகம் பற்றி குறிப்பிடப்படவுமில்லை.

ரணில் – பிரபா சமாதான ஒப்பந்தத்துக்கு பின்புதான் முஸ்லிம்களை ஒரு தனியான தேசிய இனமாகவும், அம்மக்களின் பிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரசினையும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் அங்கீகரித்திருந்தார்கள். அதுவரைக்கும் முஸ்லிம் மக்களை தமிழர்களின் ஒரு பிரிவாகவோ, அல்லது ஒரு இன குளுவாகவோதான் அவர்கள் கருதினார்கள்.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்துக்கு பின்பு முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்களின் ஏகபிரதிநிதியாக அங்கீகரித்தது மட்டுமல்லாது, கிளிநொச்சிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி பிரபா – ஹக்கீம் என்னும் உடன்படிக்கை ஒன்றினையும் விடுதலை புலிகள் முஸ்லிம் காங்கிரசுடன் செய்து கொண்டார்கள். இது முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த வெற்றியும், அங்கீகாரமுமாகும். அத்துடன் ஒரு சிறுபான்மை இனம் இன்னுமொரு சிறுபான்மை இனத்தினை அங்கீகரிப்பதென்பது உலக அரசியலில் அரிதான விடயம்.

யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு அன்றய அரசாங்கத்துக்கும், விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பலமாக முன்வைத்ததுடன், இப்பேச்சுவார்த்தை மேசையில் தனித்தரப்பாக அல்லது மூன்றாம் தரப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் காங்கிரசினால் முன்வைக்கப்பட்டது.

முஸ்லிம் காங்கிரசின் தயவில் அன்று ஆட்சி செய்துகொண்டிருந்த அன்றைய ஐ. தே. கட்சி அரசாங்கமானது, அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையினை நேரடியாக நிராகரிக்காமல், விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தனித்தரப்பாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என்று பந்தினை தமிழர்கள் பக்கம் திருப்பினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்.

ஆனால் புலிகளோ “நாங்கள் பல தசாப்தங்களாக ஏராளமான உயிர்களையும், உடமைகளையும் இழந்து, தங்கள் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள். இப்போது மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொண்டு அரசாங்கத்துடன் சம அந்தஸ்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடாத்த உள்ளோம். இந்த நிலையில் நீங்கள் சும்மா இருந்துவிட்டு பேச்சுவார்த்தை மேசையில் சம அந்தஸ்து கோரினால் அதனை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்” என்று கூறி முஸ்லிம் காங்கிரசின் தனித்தரப்பு கோரிக்கையினை புலிகள் இயக்கத்தினர் முற்றாக நிராகரித்தனர்.

இந்த நிலமையில்தான் சம அந்தஸ்துள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை மேசையில் கலந்துகொள்வதற்காகவும், முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக பேசுவதற்கும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அரசாங்க தரப்பு ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்போது தாய்லாந்திலும், நோர்வேயிலும் நடைபெற்ற விடுதலை புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் சார்பாக அரச தரப்பு பிரதிநிதியாக தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

அரச தரப்பாக கூட பேச்சுவார்த்தை மேசையில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களின் பிரதிநிதியை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விடுதலை புலிகள் தரப்பு அன்று கூறியிருந்தால், அன்றைய அரசாங்கம் கையை விரித்திருக்கும். அதாவது யுத்த நிறுத்தத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று கூறி, புலிகளின் கோரிக்கைக்கமைய முஸ்லிம் தரப்பு பிரதிநிதியினால் அப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாமல் இருந்திருக்கும்.

இன்று சர்வதேச சமூகம் ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களது அரசியல் உரிமையினை வழங்குமாறு இலங்கை அரசை தொடர்ந்து வற்புறுத்துகின்றது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளும், மற்றும் புலிகளை அழிப்பதில் வரிந்துகட்டிக்கொண்டு இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா போன்ற நாடுகளும் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

ஆனால் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களுக்கும் அரசியல் தீர்வினை வழங்குமாறு எந்தவொரு முஸ்லிம் நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்தியதாக இல்லை. இங்குள்ள சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு அரபு நாட்டு பிரமுகர்களை சந்தித்துவிட்டு, ஏதோ தாங்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகள் சம்பந்தமாக அரபு நாட்டு தலைவர்களுடன் பேசியதாக ஊடகங்கள் மூலமாக அறிக்கை விடுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது மக்களுக்கு காண்பிக்கும் பொருட்டு தங்களது அரசியலுக்கான காய்நகர்த்தலாகும்.

இலங்கை அரசு மீதான சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கு சாதகமாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட இருக்கின்ற இவ்வேளையில், முஸ்லிம்களுக்கு சாதகமாக தமிழ் தரப்பு பிரதிநிதிகள் தங்களது நல்லெண்ணத்தினை காண்பிப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு ஆரோக்கியமான விடயமாகும்.

இவ்வாறான அரசியல் நகர்வில் தங்களுக்கு வகிபாகம் இல்லாததான் காரணமாக இதனை எப்படியும் குழப்ப சில அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இதனாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நல்லெண்ணத்தினை பிழையான முறையில் சித்தரிக்க முயல்கின்றார்கள். இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் அக்கறையை விட தங்களது தனிப்பட்ட நலன்களே முக்கியமானதாகும்.

மாறி மாறி ஆட்சி செய்துவந்த சிங்கள அரசாங்கங்கள் எப்பொழுதும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் ஏதோ ஒரு சாட்டுக்களை சொல்லி தட்டி கழித்து வந்ததே வரலாறாகும். அதேபோல இம்முறையும் முஸ்லிம் மக்களின் தலையில் பளியைபோட்டு, முஸ்லிம் மக்களின் உரிமையிலும், பாதுகாப்பிலும் தாங்கள் அக்கறை செலுத்துவதாக கூறி சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வு வழங்குவதை குழப்பி அடிக்க கூடும்.

இப்படியான அரசியல் தந்திரோபாயத்தினை சிங்கள அரசாங்கம் மேற்கொள்வதனை தடுத்து சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கின்ற அதேவேளை, இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்த இரு சமூக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் உறுதியாக உள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில உதிரிகள் விமர்சித்து திரிவதானது அவர்களது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

எனவேதான் சர்வதேசத்தின் பலமான ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்போது, தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டின் மூலமே முஸ்லிம் மக்களுக்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் தரப்பினர் முரண்பட்டால், முஸ்லிம் மக்களுக்கான எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். இதனையே சிங்கள அரசாங்கமும் விரும்பும் என்பதனை சில முஸ்லிம் மேதாவிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே யதார்த்தமாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares