தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

மலையக சிறுமியின் மரணம் அ.இ.ம.கா தலைவரின் வீட்டையே உலுக்கும் விவகாரமாக மாறியுள்ளது. அ.இ.ம.கா தலைவரைத் தான் இனவாதம் ஆட்டி படைக்கின்றது என பார்த்தால், தற்போது அவரது குடும்பத்தையும் அசைக்கும் நிலைக்கு வந்துள்ளது. இது மிகவும் கவலையான நிலை. இப்படி துயரமான நிலை எந்த அரசியல் வாதிக்கும் நிகழ்ந்ததான வரலாறில்லை. குறித்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட கோரி நாளாந்தம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆர்ப்பாட்டங்கள் எப்போது அவசியமாகின்றன என்ற வினா இவ்விடத்தில் மிக முக்கியமானது. ஒருவருக்காக நீதி வளையும் நிலையில் உள்ள போதே, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். தற்போது அ.இ.ம.கா தலைவர் எந் நிலையில் இருக்கின்றார் என்பதை சர்வதேசமே அறியும். அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு நீதி கோரி, ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். இவர் ஏதாவது தவறு செய்திருந்தால், ஆர்ப்பாட்டம் நடத்தியே தீர்வை பெற வேண்டும் என்ற நிலை இல்லை. சாதாரணமாகவே உயரிய நீதி நிலை நாட்டப்படும். எங்கே அ.இ.ம.கா தலைவரை சிக்கலில் மாட்ட வைக்கலாமென ஒரு பாரிய சக்திவாய்ந்த குழு உள்ளது. இவ்வாறான நிலையில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, நீதி கோருவதை போன்ற மடமையை என்னவென்று சொல்வது? இந்த வீரியத்தை மலையக மக்களின் சம்பள விவகாரத்தில் காட்டியிருந்தால், ஏதாவது பயனுள்ள தீர்வாவது கிடைத்திருக்கும். ஹிசாலினி போன்ற சிறுமிகள் வறுமையால் வேலைக்கு செல்வதையும் தடுத்திருக்கலாம்.

ஒருவர், தான் வேலை செய்யும் இடத்தில் மரணித்தால், அதற்கு வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர்கள் எவ்வாறு பெறுப்பாக முடியும். அவ்வாறான கோணத்திலும் விசாரணை நடைபெற வேண்டும். அக் கோணத்திலேயே விசாரிக்க வேண்டும் எனும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. தற்கொலை என்னவோ அ.இ.ம.கா தலைவரின் வீட்டில் மாத்திரம் நடந்தது போன்றே சிலர் ஒப்பாரி வைக்கின்றனர். குறித்த விடயத்தை ஊடகங்கள் வெளியில் கொண்டுவந்த பிறகே, யாவரும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருந்தனர். அ.இ.ம.கா தலைவரின் வீட்டில் யாருக்காவது காற்று போனாலும், அணு குண்டு போட்டுவிட்டதாக கூறும் ஊடகங்களும், அரசியல் சக்திகளும் இருக்கும் நிலையில், அவரோ அல்லது அவரது குடும்பமோ பிழை செய்திருந்தால், ஆர்ப்பாட்டம் செய்தே நீதியை பெற வேண்டிய நிலை இல்லை என்பதில் தெளிவாக வேண்டும்.

அ.இ.ம.கா தலைவரின் நிலை பற்றி அறிந்தவர்கள், அவருக்காக நீதி வளையும் நிலையில் இல்லை என்பதை கிஞ்சித்தேனும் சந்தேகமின்றி ஏற்க முடியும். மரணிப்பதற்கு முன், குறித்த சிறுமி வழங்கிய மரண வாக்குமூலத்தில், தான் தற்கொலை செய்ததாக கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. இது உறுதி செய்யப்படவில்லை. அதே போன்று பொலிசாரும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக மனோ கணேசனே, தனது அறிக்கையில் வெளிப்படுத்தி இருந்தார். இவைகள் உட்பட பல விடயங்கள் தற்கொலை என்பதை நிறுவும் வகையில் அமைந்துள்ளன. ஏன் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தற்கொலையும் நடந்திருக்கலாம் என சிந்திக்க தவறுகின்றனர்.

அ.இ.ம.கா தலைவரை ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சம்பந்தப்படுத்துபவர்களில் பா.உ சரத் வீரசேகரவும் ஒருவர். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பல விடயங்களை முன்னின்று செய்பவராகவும் கருதப்படுபவர். இப்படியான பண்புடைய பா.உ சரத் வீரசேகர, அ.இ.ம.கா தலைவர் றிஷாதுக்கு ஆதரவாக பேசுவாரா? இவரே குறித்த மரண விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என பாராளுமன்றத்திலேயே கூறியிருந்தார். இவர் குறித்த விடயத்தோடு தொடர்புடைய அமைச்சை கையில் வைத்திருப்பவர். உண்மை எதுவென துல்லியமாகவும், முதலிலும் அறியக்கூடிய இடத்தில் உள்ளவர் என்பது இங்கு சுட்டிகாட்டத்தக்கது. இதுவே குறித்த விடயத்தில் அ.இ.ம.கா தலைவரின் கை சுத்தத்தை தெளிவு செய்ய போதுமானது.

ஏன் சரத் வீரசேகர இவ்வாறு கூறினார் என கேட்கலாம். அ.இ.ம.கா தலைவரை ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்படுத்தி, அரசு பாரிய சிக்கலில் அகப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். உண்மை என்றால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை. பொய்யாக சோடனை செய்து சமாளிப்பது கடினம். இந்த பிரச்சினையும் ஊதி பெருப்பிக்கப்பட்டால், இதனையும் சமாளிப்பதும் கடினம். குறித்த பிரச்சினையை தேவையற்ற பாதைக்கு செல்லாமல் தடுப்பதே, அவரது பேச்சின் நோக்காக இருக்க வேண்டும். இந்த பிரச்சினையும் அரசியலானால், அதனை நோக்கும் கோணம் மாறிவிடுமல்லவா?

மேலுள்ள விடயங்களை நன்கு ஆராயும் ஒருவர் அ.இ.ம.கா தலைவருக்கு நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் சந்தேகம் கொள்ளலாம், அ.இ.ம.கா தலைவர் தவறிழைத்திருந்தால் உயரிய நீதி நிலைநாட்டப்படும் என்பதில் சிறிதும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் விசாரணையின் கோணத்தை திசை திருப்பவல்லது. யாராவது குற்றவாளியாக இருந்தாலும் தப்பிக்க ஏதுவாகிவிடும். அரசிடம் உண்மையை வெளிப்படுத்த கோருவது நியாயமானது. அ.இ.ம.கா தலைவரை உள்ளத்தில் நிலைப்படுத்தி நீதியை நிலைநாட்ட கோருவது அபத்தமானது. ஒரு பெண்ணின் சடலத்தில் அரசியல் செய்யும் ஈனப் பிறவிகளும் இந் நாட்டில் உள்ளார்கள் என நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares