ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக மெகபூபா

ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்கும் விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பிடிபி – பாஜக ஆகிய கட்சிகள் அங்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.

 முதல்வர் முப்தி முகமது சையது உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மகள் மெகபூபா புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடியை மெகபூபா சந்தித்த பின்னர், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி – பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் கூட்டணி ஆட்சியமைக்க உடன்பாடு ஏற்பட்டது.

அதனையடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக மெகபூபா முப்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக வருகிற 4-ம் தேதியன்று பதவியேற்கும் முப்தி, அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கும் உள்ளாகியுள்ளார்.

மேலும், மெகபூபா முப்தி பதவியேற்கும் விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்று தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares