சோபித தேரரின் மரணம் குறித்து சீ.ஐ.டி. விசாரணை ஆரம்பம்!

சோபித தேரரின் மரணம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக நீதிக்கான அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கோட்டே நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியுமான சோபித தேரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சிக்குச் சார்பானவர்கள் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் சட்டவிரோத யானை வளர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள உடுவே தம்மாலோக தேரரும் இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து சோபித தேரரின் மரணம் குறித்து பகிரங்கமான விசாரணையொன்றை நடத்துமாறு சமூக நீதிக்கான அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எழுத்து மூல வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தது.

இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை நேற்று  முதல் ஆரம்பித்துள்ளனர்.

விசாரணையின் ஒருகட்டமாக உடுவே தம்மாலோக தேரரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares